ETV Bharat / state

நடிகர் ரஜினி காலில் விழுந்த விவகாரம்.. பூனை குட்டி வெளியே வந்து விட்டதாக திருமாவளவன் விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 11:42 AM IST

Updated : Aug 22, 2023, 12:41 PM IST

VCK leader Thirumavalavan criticized actor Rajinikanth touch Yogi Adityanath feet issue
நடிகர் ரஜினிகாந்த் மீது தொல்.திருமாவளவன் விமர்சனம்

VCK leader Thirumavalavan criticized Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகி இருந்தால் யோகி ஆதித்யநாத் அல்லவா முதலமைச்சரானதைப் போல் தமிழகம் ஆகியிருக்கும். தமிழக மக்கள் ரஜினிகாந்தை எவ்வளவு உயரத்தில் வைத்திருந்த நிலையில் எப்படிப்பட்ட உறவு உங்களுக்குள் இருப்பது என்பதை ஒரே நிகழ்வில் காட்டி விட்டதாக நெல்லையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் மீது திருமாவளவன் விமர்சனம்

திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பிளஸ் 2 மாணவன் சாதி வன்மத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தென் தமிழகத்தில் நடைபெறும் தொடர் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தை போன்ற இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய பிரச்னைகளைத் தடுக்க காவல்துறையில் தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தொடர்ந்து ஜாதியை வன்கொடுமைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் திடீரென நடைபெற்ற சம்பவம் கிடையாது, திட்டமிட்டே நடத்தப்பட்டது. ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து சமூகவிரோத சம்பவங்களை செய்து விட்டு எளிதில் வெளியே செல்லும் நிலை தான் இருபதாம் நூற்றாண்டிலும் நடந்து வருகிறது. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற தலித் அரசியல் பேசும் திரைப்பட கலைஞர்கள் தான் இது போன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என கண்டறிந்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். இது போன்ற மூடர்கள் அரசியல் தலைவராக தெரிகிறார்கள்.

இந்தியாவில் மதமாற்றம் நடக்க சாதிய கோட்பாடுகள் தான் காரணம் சாதிய மதவாத அரசியலை பரப்பும் அமைப்புகளை அரசு என்ன செய்யப் போகிறது. சாதியை ஒழிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள். அம்பேத்கரியன் என்பதுதான் சாதிய அழுக்கை சுத்தம் செய்யும் சோப்பு. சகோதரத்துவம் வளர்ந்தால் தான் சாதி ஒளியும், சகோதரத்துவம் வளர்ந்தால் தான் சமத்துவம் ஜனநாயகம் வளரும்.

பள்ளி கல்லூரிகளில் சாதிய பிரச்சனைகளை தூண்டினால் தான் இந்து உணர்வு மேலோங்கும் என்பது பாஜகவின் நினைப்பு. காவல்துறையில் ஊடுருவியுள்ள சாதிய மதவாத சக்திகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் வேண்டுமென்றே திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என செயல்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இளைஞர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது, போதை வஸ்துக்களின் பழக்கமும் அதிகரித்து வருகிறது. கிராமப் புறங்களில் கஞ்சா விற்பனை செய்துகொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. கொலை செய்பவர்கள் பெரும்பாலும் போதை பழக்கத்தில் உள்ளனர். இதுபோன்ற சமூகத்தில் உள்ள நிலையின் காரணமாக இளைய தலைமுறை தான் பாதிக்கப்படுகின்றனர்.

இதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது என சுட்டிக்காட்டினால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக காவல்துறை செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய முதல் நச்சு சக்தி பாரதிய ஜனதா கட்சி. அதனை தூக்கி எறிய வேண்டும் என்ற கொள்கையில் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.

அகில இந்திய அளவில் பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துப் பரவலை முன்னிறுத்தி வருகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்தால் தான் மதசார்பின்மையை பாதுகாக்க முடியும், ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும். யோகி ஆதித்யநாத் காலில் போய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து விட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி இருந்தால் யோகி ஆதித்தநாத் அல்லவா முதலமைச்சர் ஆனதை போல் தமிழகம் ஆகி இருக்கும்.

இந்த சம்பவம் எவ்வளவு பெரிய வேதனையாக உள்ளது. ரஜினிகாந்த் மீது எவ்வளவு பெரிய உயர்ந்த மரியாதையை தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். தலைவர்களை சந்திப்பது முதல்வரை சந்திப்பது பிரச்சினை அல்ல, ஆனால் காலடியில் விழுந்து வணங்குவது என்ன பொருள். யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது உங்களுக்குள்ள உறவு. தமிழக மக்கள் உங்களை எவ்வளவு உயர்வாக மதித்திருந்த நிலையில், எப்படிப்பட்ட உணர்வு உங்களுக்குள் இருப்பது என்பதை ஒரே நிகழ்வில் காட்டி விட்டீர்கள்.

இப்படிப்பட்ட நபர்களில் கையில்தான் தமிழகம் உள்ளது. இப்படிப்பட்ட நபர்கள் தான் தமிழகத்தில் கருத்து உருவாக்கம் செய்யும் இடத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் பாதுகாக்க வேண்டும். சனாதன சக்திகளை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்துவது தான் நமது கடமையாக இருக்க வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றி இன்றியமையாத தேவையாக உள்ளது.

தென் தமிழகத்தில் தொடரும் சாதியை கொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். படுகாயம் அடைந்த பள்ளி மாணவனின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்குவதுடன் அவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக அரசிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்.. அரசியல் பேச விரும்பவில்லை" - நடிகர் ரஜினிகாந்த்!

Last Updated :Aug 22, 2023, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.