ETV Bharat / state

அனுமதியில்லாத போராட்டத்துக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த போலீஸ்? - போராட்ட தலைவனுக்கு கைகுலுக்கிய துணை ஆணையர்!

author img

By

Published : Apr 15, 2023, 6:19 PM IST

Updated : Apr 15, 2023, 7:42 PM IST

Etv Bharat போராட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த போலீஸ்
Etv Bharat போராட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த போலீஸ்

திருநெல்வேலியில் அனுமதி இல்லாத ரயில் மறியல் போராட்டத்துக்கு பக்காவாக காவல் துறையினர் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின் கடைசியில் போராட்ட தலைவனுக்கு துணை ஆணையர் கைகுலுக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த போலீஸ்

திருநெல்வேலி: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்த மறுநாளே நாடாளுமன்றத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ( ஏப்.15 ) நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் அறிவித்தார். வழக்கம்போல் ரயில் மறியல் என்பதால் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் அனுமதியை மீறி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

இந்த தகவலைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால், காலை முதல் ரயில் நிலையம் பரபரப்பாக காட்சி அளித்தது. திட்டமிட்டபடி 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அங்கு திரண்டனர் கொண்டுவரப்பட்டன. எனவே ரயில் நிலையத்திற்குள் அவர்களை செல்ல விடாமல் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், காவல் துறையினரே பாதுகாப்பாக காங்கிரஸ் கட்சியினரை ரயில் நிலையத்திற்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட வைத்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது அனுமதி இல்லாத போராட்டம் என தெரிந்தும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது காவல் துறையினர் அவர்களை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காவல் துறையினரும் கூட்டத்தோடு கூட்டமாக சென்றனர். முதலில் ரயில் நிலையத்தின் முதலாவதாக நடைமேடையில் நின்ற ரயிலை மறிக்க முற்பட்டனர்.

ஆனால், அந்த ரயில் கிளம்ப தயாரானது. இதனால், அச்சமடைந்த காங்கிரசார் அங்கிருந்த மாடிப்படி வழியாக மூன்றாவது நடைமேடை நோக்கி சென்றனர். அங்கு சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அந்த்யோதயா ரயில் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அந்த ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அனுமதி இல்லாமல் கட்சியினரை ரயில் நிலையத்திற்குள் நுழையவிட்டதே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட தூரத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு சுமார் பத்து நிமிடம் வரை காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்து அவர்கள் ஆசை தீர கோஷம் எழுப்பினர்.

அதுவரை அதிகாரிகள் உட்பட காவல் துறையினர் ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர். பின்னர், சுட்டெரித்த வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் அவர்களாகவே எழுந்து தண்டவாளத்தில் விலகிச் சென்றனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தின் நுழைவாயில் வரை கோஷம் எழுப்பியபடியே கையில் கட்சி கொடியுடன் வலம் வந்தனர். அப்போதும் காவல் துறையினர் அவர்களை கண்டு கொள்ளவில்லை. இறுதியாக அனைத்தையும் செய்து முடித்த பிறகு ரயில் நிலையத்தின் வெளியே வைத்து காவல் துறையினர் கடமைக்கு அவர்களை கைது செய்தனர்.

முன்னதாக பாதுகாப்பை தலைமை ஏற்று நடத்திய துணை ஆணையர் சரவணகுமார், போராட்டத்தின் தலைவரான மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியனுக்கு கைகுலுக்கிய சம்பவம் மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதாவது, காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறி அவர் கை கொடுத்ததாக தெரிகிறது. அதேசமயம் அனுமதி அளிக்காமல் போராட்டத்தை முழுமையாக நடத்தி முடித்த நபருக்கு காவல் துறை அதிகாரி கைகுலுக்கிய சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்கள் உட்பட 130 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. காவல் துறையினரின் அலட்சியம் காரணமாக நாகர்கோவில் செல்ல வேண்டிய அந்த்யோதயா ரயில் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலையில் 'இம்மர்சிவ்' படிப்பு.. பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை!

Last Updated :Apr 15, 2023, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.