திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 நாட்களுக்கு முன்பாகவே குடும்பத்தினருடன் வருகை தரும் பக்தர்கள், குடில்கள் அமைத்து தங்கி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாகப்பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 30ஆம் தேதி வரை அரசுப்பேருந்துகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உறவினர்களான சரவணன், விஷ்ணு குமார் ஆகியோர் குடும்பத்துடன் இன்று காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது சரவணனின் 8 வயது மகனும், விஷ்ணு குமாரின் 10 வயது மகனும் கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் ஓரம் நின்று கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் சிறுவர்கள் இருவரும் மாயமானதால், பெற்றோர்கள் பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் சிறிது நேரத்தில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்தனர். உடனடியாக, சிறுவர்கள் இருவரையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் உறவினர்கள் மற்றும் திருவிழாவிற்கு வருகை புரிந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே நபர் சரமாரியாக வெட்டி படுகொலை