ETV Bharat / state

"பாம்பின் பற்களை பிடுங்குவதில் தவறில்லை" ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு ஆதரவாக பேனர்.. நெல்லை சம்பவத்தில் திடீர் திருப்பம்!

author img

By

Published : Apr 1, 2023, 8:31 AM IST

public did a special pooja at temple to reinstate the suspended ASP for tooth extraction
பல்லை பிடுங்கிதாக கூறப்படும் ஏஎஸ்பிஐ மீண்டும் பணியமர்த்த பொதுமக்கள் கோயிலில் சிறப்பு பூஜை

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் சரக ஏஎஸ்பி மீது எழுந்த புகாரின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஊர் பொதுமக்கள் அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஏஎஸ்பி பல்வீர் சிங் தான் வேண்டும் - பூஜை செய்து வழிபட்ட பாம்பாக்குடி மக்கள்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) இருந்த பல்வீர் சிங் கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பல்லைக் கொடூரமாகப் பிடுங்கி சித்திரவதை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் பரபரப்பு வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஏஎஸ்பி மீதான புகார் குறித்து விசாரிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.

தொடர்ந்து அவர் கடந்த திங்கள்கிழமை முதல் விசாரணையைத் தொடங்கிய நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் சட்டசபையில் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் சார் ஆட்சியர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சூர்யா. லட்சுமி சங்கர். வெங்கடேஷ். சுபாஷ் ஆகிய 4 பேரிடம் இதுவரை விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதில் சுபாஷ் தவிர மீதமுள்ள மூன்று பேரும் ஏஎஸ்பி பல்வீர் சிங் தங்கள் பற்களைப் பிடுங்கவில்லை என சாட்சியம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விவகாரத்தை முதன் முதலாக வெளியே கொண்டு வந்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங் மிகக் கொடூரமாக கட்டிங் பிளேயரை கொண்டும் ஜல்லிக்கற்களை வாயில் போட்டும் பல்லை உடைத்ததாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த அமைப்பின் பக்கம் உள்ள செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், மாரியப்பன் மற்றொரு மாரியப்பன், சுரேஷ் உள்ளிட்ட ஏழு பேர் ஏஎஸ்பி பல்வீர் சிங் தான் பல்லை பிடுங்கியதாக உறுதியாகக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளது. எனவே விசாரணை கைதிகளைக் காவல் நிலையத்தில் வைத்து மிக கொடூரமாகப் பல்லைப் பிடுங்குவதாக எழுந்த புகாரால் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அவர் ஒரு மிக கொடூரமான அதிகாரி என பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு இயக்கங்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே ஒரு சாரர் அவரை மிகப் பெரிய வில்லனாகப் பார்க்கும் அதே வேளையில் தற்போது அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மிக நேர்மையான அதிகாரி எனவே அவரை மீண்டும் அம்பாசமுத்திரம் பகுதியில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்த பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தபோது, பல்வீர் சிங் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அம்பாசமுத்திரம் காவல் சரக உதவி கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். இளம் ஐபிஎஸ் அதிகாரியான அவர் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் குற்றங்களை தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் தெருவுக்குத் தெரு சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்பதே பல்வீர் சிங் லட்சியமாக இருந்துள்ளது.

அதன்படி அந்தந்த பகுதி மக்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமரா அமைத்து வந்துள்ளார். இதன் மூலம் அம்பாசமுத்திரம் பகுதியில் குற்றச் செயல் பெருமளவு குறைந்தது. குறிப்பாக அவ்வப்போது கொலை நடைபெறும் பகுதியாக அறியப்படும் அம்பாசமுத்திரம் பகுதியில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் ஒரு கொலை கூட நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல் இவர் பொறுப்பேற்ற பிறகு தான் அம்பாசமுத்திரம் பகுதியில் 100 கிலோ அளவிற்குக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தற்போது ஏஎஸ்பி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து வரும் செல்லப்பா, ரூபன், அந்தோணி, சுபாஷ், சுரேஷ், இசக்கிமுத்து, மாரியப்பன் மற்றொரு மாரியப்பன் ஆகிய ஏழு பேரில் சுபாஷ் என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் நண்பர் அருண்குமார் தட்டி கேட்டபோது அருண்குமாரைச் செல்லப்பா உள்பட ஏழு பேரும் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் ஆயுதத்தைக் கொண்டு விரட்டிச் சென்று ஆடு வெட்டும் கத்தியால் தலையில் தாக்கியுள்ளனர்.

அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அருண்குமாருக்குத் தையல் போடப்பட்டிருப்பதாக அவரது தாய் ராஜேஸ்வரி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வழக்கில் தான் செல்லப்பா மற்றும் உள்பட அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தான் ஏஎஸ்பி அவர்கள் பல்லை பிடுங்கியதாக மேற்கண்ட நபர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏஎஸ்பி பல்வீர் சிங் உண்மையாகவே கொடூரமானவரா அல்லது மக்களைப் பாதுகாப்பதில் கைதிகளிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பொதுமக்கள் பேனர் வைத்தும் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தியும் வருகின்றனர்.

அதன்படி பாப்பாக்குடி அருகே துலுக்கப்பட்டி ஓடக்கரை பகுதியில் பொதுமக்கள் வைத்துள்ள பேனரில் தமிழக அரசே ஏஎஸ்பி பல்வீர் சிங்கை மீண்டும் பணியில் அமர்த்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் அப்பகுதி உள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தியும் அம்மன் பாதத்தில் ஏஎஸ்பி உருவப்படத்தை வைத்து மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும் என வேண்டினர்.

இதுகுறித்து அப்பகுதியினர், எங்கள் பகுதியில் கோவில் கொடை விழாவிற்கு வந்து பாதுகாப்பு அளித்தார், சி.சி.டி.வி. கேமாராக்கள் வைக்க நடவடிக்கை மேற்கொண்டார், எளிமையாகப் பேசினார். அவர் பல்லை பிடுங்கியதாகக் கூறுகின்றனர். அவர் நல்லவர்களின் பற்களை பிடுங்கவில்லை கெட்டவர்களின் பல்லைத் தான் பிடுங்கி உள்ளார். கெட்ட விஷம் கொண்ட பாம்பின் பல்லைப் பிடுங்குவது போல் அவர் கெட்டவர்களின் பல்லைப் பிடுங்கி உள்ளார். இதனால் அவருக்காகச் சிறப்புப் பூஜைகள் செய்ததாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பல்வீர் சிங் பற்களை பிடுங்கிய விவகாரம் - பாதிக்கப்பட்டவர்கள் நடுரோட்டில் செய்த ரவுடிசம் - சிசிடிவி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.