ETV Bharat / state

நெல்லை திமுகவில் அதிரடி மாற்றம்.. உட்கட்சி பூசலை தடுக்க புதிய ஐடியா.. மாவட்ட செயலாளர் மைதீன் கான் கூறியது என்ன?

author img

By

Published : May 29, 2023, 9:52 AM IST

திமுக உள்கட்சி பூசலை தடுக்க புதிக வியூகம் - மாவட்ட செயலாளர் மைதீன் கான்!
திமுக உள்கட்சி பூசலை தடுக்க புதிக வியூகம் - மாவட்ட செயலாளர் மைதீன் கான்!

திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உட்கட்சி பூசலை தடுக்கும் புது வியூகத்தை நெல்லை திமுக புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மைதீன் கான் கூறியுள்ளார்.

மைதீன் கான் பேசிய வீடியோ

திருநெல்வேலி: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் அப்துல் வகாப் இவர் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாப்பை திமுக தலைமை கழகம் திடீரென நீக்கியுள்ளது. அவருக்குப் பதில் முன்னாள் அமைச்சர் மைதீன் கானை திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மைதீன் கான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர். அப்துல் வகாப் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் திமுகவின் உள்கட்சி பூசலே காரணம் எனத் தகவல்கள் வெளியானது. அதாவது நெல்லை மாவட்டத்தில் திமுக நிர்வாக ரீதியாக மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம் என இரண்டாகப் பிரித்துள்ளது.

கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இருக்கிறார். அங்குப் பெரிய அளவில் உள்கட்சி பூசல் இல்லை. ஆனால் மத்திய மாவட்ட திமுகவில் அப்துல் வகாப் ஒரு அணியாகவும், மாநகர திமுக நிர்வாகிகள் ஒரு கோஷ்டியாகவும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும் பிரிந்து செயல்பட்டனர்.

தற்போது மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மைதீன் கான், மாலை ராஜா கோஷ்டியிலிருந்து வந்தவர். அப்துல் வகாப் தனக்குக் கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான நிர்வாகிகள் உடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். குறிப்பாக மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டினார். அவரால் மாநகர திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட சுப்ரமணியன் தனி கோஷ்டியாகச் செயல்பட்டு வருகிறார்.

எனவே, பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் மாநகர திமுக செயலாளர் ஆதரவாளர்களை மிரட்டும் சம்பவமும் நடைபெற்றது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலின் போது, முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆதரவால், கவுன்சிலரான சரவணன் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே சமயம் மேயரான பிறகு, அப்துல் வகாப் அவரை வெளிப்படையாக மிரட்டி தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறியதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், மேயர் சரவணன் வீட்டு ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டது. எனவே, மேயர் சரவணன் அப்துல் வகாப்பின் எத்திரணியான மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் உடன் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது அப்துல் வகாப், தனது ஆதரவு கவுன்சிலர் மூலம் நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக மேயருக்கு எதிராகப் பிரச்சனையைக் கிளப்பி வந்தார். மேயர் சரவணன் தனக்கு வேண்டிய திமுக நிர்வாகிகளை மேயர் அறையில் வைத்துக் கொண்டு ஒப்பந்ததாரர்களுடன் கமிஷன் கேட்பதாகவும், அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், மேயரை மாற்றக் கோரி துணை மேயர் ராஜூ உள்பட அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் முப்பதுக்கு மேற்பட்டோர் சமீபத்தில் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து முறையிட்டனர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஆளுங்கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட மேயரை மாற்றக் கோரி பிரச்சனை செய்து வந்த சம்பவம் திமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.

அதனை அடுத்து, அப்துல் நடவடிக்கை பிடிக்காததால் பல மூத்த நிர்வாகிகளும் அவருக்கு எதிராக திமுக தலைமையிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர். மேலும், உளவுத்துறை அறிக்கையும் அப்துல் வகாப்பிற்கு எதிராகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, திமுக தலைமை அப்துல் வகாப் மீது ஒரு கண் வைத்திருந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நெல்லை வந்த மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனை வரவேற்க சென்ற அப்துல் வகாப் ஆதரவாளர்களும், மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் ஆதரவாளர்களும் அவர் கண் முன்பே கடுமையாக மோதிக் கொண்டனர்.

குறிப்பாக மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் மேயர் சரவணன் இருவரையும், துரைமுருகனை வரவேற்க விடாமல் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் அடாவடியில் ஈடுபட்டனர். இதை கண்முன்னே பார்த்த துரைமுருகன் அப்துல் வகாப் மீது கடும் அதிருப்தியிலிருந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து அப்துல் வகாப் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் போல் பங்கேற்று வருகிறார். இது போன்ற சூழ்நிலையில் நேற்று நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அப்துல் வகாப்பிற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அதன் பெயரில் அப்துல் வகாப் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். குறிப்பாகத் துணை மேயர் ராஜூ உள்ளிட்டோர் அப்துல் வகாப் உடன் வந்திருந்தனர். அப்போது மேடையில் மைதீன் கான் அருகில் அப்துல் வகாப் அமர்ந்திருந்தார். பின்னர், மைதீன் கானுக்கு அப்துல் வகாப் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அப்துல் வகாப் பேசும் போது, “தலைமை கழகம் எனக்கு பல்வேறு பொறுப்புகளைக் கொடுத்திருந்தது. உறுப்பினர் சேர்க்கை பணியைக் கொடுத்தனர். அந்த பணியைச் சிறப்பாகச் செய்து வந்தேன். அது தொடர்பான ஆவணங்களைத் தலைமைக் கழகத்திடம் கொடுத்து விடுவேன். கடந்த 2011 முதல் கழகத்திற்கு சோதனை காலகட்டம் வந்தபோது பணியாற்றி வந்தேன். கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறப் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முழுமையாக எனது பங்களிப்பைக் கொடுப்பேன்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை திருநெல்வேலி தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் வாங்கிக் கொடுப்பேன்” என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் பேசும்போது, “அண்ணா சொன்னது போல், நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சண்டையை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம். இந்த வாட்ஸ் அப் போன்ற நவீன காலத்தில் எங்கு பார்த்தாலும் கேமராக்கள், எனவே அனைத்தும் பதிவு செய்யப்படுக்கின்றன. முன்பெல்லாம், கட்சி கூட்டங்கள் பதிவு செய்யப்படாது, ஆனால் இப்போது அது பதிவு செய்யப்பட்டு வதந்திகளாக மாறுகிறது. எனவே, நமது செய்திகள் வெளியே வராத வண்ணம் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆணையிடுங்கள், நான் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதால் அப்துல் வகாப் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர். அதேசமயம் கூட்டத்தில் பங்கேற்றது மட்டும் இல்லாமல் பிரச்னை எதுவும் செய்யாமல் அமைதியான முறையில் தனது பங்களிப்பை அப்துல் வகாப் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IT Raid: தொடரும் வருமான வரித்துறையினரின் சோதனை..கரூர் வீட்டிற்கு அடுத்த ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.