ETV Bharat / state

மாணவர்கள் படிப்பு குறித்து கணக்கு கேட்ட கவுன்சிலர்: ஆணையர் கொடுத்த பதில்?

author img

By

Published : Dec 1, 2022, 6:36 AM IST

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கணக்கு கேட்ட கவுன்சிலருக்கு தனது சொந்த செலவில் படிக்க வைப்பதாக ஆணையர் பதில் அளித்தார்.

மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கணக்கு கேட்ட கவுன்சிலர்: ஆணையர் கொடுத்த பதில்
மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கணக்கு கேட்ட கவுன்சிலர்: ஆணையர் கொடுத்த பதில்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (நவ.30) நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு, ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

மேலும் கூட்டத்தில் மேயர் சரவணன் பேசும்போது, அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை முழுமையாக சரி செய்யப்படும் என்றார்.

தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பேசும் போது, தனது மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாதி பெயர்கள் தெருக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த சிவ கிருஷ்ணமூர்த்தி, இது பிரச்சினைக்குரிய விஷயம் அரசு வழிகாட்டுதல்படி தான் தெருக்களின் பெயர்களை மாற்ற முடியும், மன்ற கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 55 வது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் பேசும்போது, குடிநீர் குழாய் அமைப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் நிறைவேற்றப்படுவதால் மக்கள் அவதி அடைகின்றனர். எனவே உரிய திட்டமிடலோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கணக்கு கேட்ட கவுன்சிலர்: ஆணையர் கொடுத்த பதில்?

மேலும் அவர் பேசும்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் மாடியில் மாணவர்கள் கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பொதுவாக மாநகராட்சிக்கு வருவாய் வரக்கூடிய விஷயங்களில் வரவு செலவு செய்வதில் தான் மாமன்ற உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் காலியாக இருந்தது கடைகள் எதுவும் இல்லை, வருமானம் வரவில்லை.

எனவே எனது சொந்த செலவில் அங்கு கற்றல் மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தான் இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே நம்ம ஊரில் இருந்து ஒரு ஐஏஎஸ் அதிகாரி உருவானால் சந்தோஷம் தானே என்று கூறினார்.

மழை மற்றும் வெயில் நேரங்களில் சாலை ஓரங்களில் பாதுகாப்பின்றி படித்து வரும் போட்டி தேர்வுகளுக்காக இந்த கற்றல் மையம் சமீபத்தில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மேயர் ஆணையரிடம் முறையிட்டனர்.

முன்னதாக திமுக கவுன்சிலரும், மேலப்பாளையம் மண்டல சேர்மனுமான கதிஜா இக்லாம் பாசிலா பேசும்போது, தனது மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சனை சரியாக தீர்க்கப்படவில்லை. பொதுமக்கள் கவுன்சிலர்களின் வீடுகளில் காத்திருந்து குறை சொல்லும் நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் சீரமைப்பதிலும் முறையான திட்டமிடல் இல்லாமல் பணிகள் நடைபெறுகிறது என்று சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் கோஷமிட்டதால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மண்டல சேர்மன் பேச்சை கேட்டு கோபம் அடைந்த ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை அதிகாரிகள், ஊழியர்கள் என இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.

எந்த அதிகாரியும் பெஞ்சு தேய்த்துக்கொண்டு செல்லவில்லை, நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் அனைத்தும் 30 நாட்களில் ஏற்கப்பட்டது என பதிலளித்தார்.

இதனிடையே தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத மூன்று அதிமுக உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 6 மாநிலம் 6 கல்யாணம்..? சோட்டு குமாரின் சில்மிஷம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.