பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிடும் பெண்ணுக்கு ஆதரவாக ஊரே களமிறங்கிய விநோதம்

author img

By

Published : Sep 27, 2021, 2:22 PM IST

g

ஒன்பது ஆண்டுகளாகத் தான் வேலை பார்த்த பஞ்சாயத்திற்குத் தலைவராகப் போட்டியிடும் பெண் ஒருவருக்கு ஆதரவாக ஒரு ஊரே களமிறங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி. இவரது கணவர் வாசுதேவன் ஆட்டோ ஓட்டிவருகிறார்.

ஊருக்கு நல்லது செய்யும் சிவசக்தி

சிவசக்தி குன்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2012ஆம் ஆண்டுமுதல் ஊராட்சி களப்பணி பொறுப்பாளர், 100 நாள் வேலைத்திட்ட அலுவலர், மகளிர் சுய உதவிக்குழு கணக்காளர் போன்ற பல்வேறு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்துவந்துள்ளார்.

தான் பார்க்கும் வேலையால் முடிந்தவரை கிராம மக்களுக்குப் பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிவசக்தி பணிபுரிந்துவருகிறார். குன்னத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ஏழு குக்கிராமங்களில் 22-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.

v
சிவசக்தி

இந்த ஊராட்சியை குடிசைகள் இல்லாத பகுதியாக மாற்ற பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் வீடுகள் கிடைக்க சிவசக்தி நடவடிக்கை எடுத்துவருகிறார். இதன்மூலம் சுமார் 72 பேர் பிரதமர் மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட வற்புறுத்தல்

அதேபோல் குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை சிவசக்தி செய்து கொடுத்துள்ளார். இதற்கிடையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியானதை அடுத்து நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இருக்கும்போதே தங்களுக்கு நல்லது செய்யும் சிவசக்தி பஞ்சாயத்துத் தலைவர் ஆனால் நிச்சயம் மேலும் நமது கிராமம் முன்னேற்றம் அடையும் என்பதை அறிந்து சிவசக்தியை தேர்தலில் போட்டியிடும்படி ஊர் பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர்.

கிராம மக்கள் தேர்தல் பரப்புரை

முதலில் தயங்கிய சிவசக்தி தற்போது குன்னத்தூர் ஊராட்சி மன்றத்துக்குத் தலைவராகப் போட்டியிடுகிறார். அவருக்குத் தேர்தல் ஆணையம் ஏணி சின்னம் ஒதுக்கியுள்ளது. இதற்கிடையில், சிவசக்தி தற்போதுதான் பார்த்துவரும் வேலையை ராஜினாமா செய்துள்ளார். சிவசக்திக்கு ஆதரவாகவும் அவரை வெற்றிபெறச் செய்திடும் முனைப்பிலும் கிராம மக்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

சிவசக்தி எங்கள் நம்பிக்கை

இது குறித்து குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் கூறுகையில், "சிவசக்தி பஞ்சாயத்தில் இருந்தபோது எங்கள் ஊருக்கு ஏராளமான நல்ல திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளார். குறிப்பாக எங்கள் பகுதியை கழிவறைகள் இல்லாத வீடு இல்லை என்று மாற்றிகொடுத்துள்ளார்.

சிவசக்திக்கு கிராமமக்கள் ஆதரவு

அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வீடில்லா மக்களுக்கு பிரதம மந்திரியின் வீடுகள் வழங்கும் திட்டம் எனப் பல்வேறு நல்ல விஷயங்கள் செய்து கொடுத்துள்ளார். அவர் தலைவராக வந்தால் மேலும் எங்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில், சிவசக்திக்கு நாங்கள் ஆதரவு தெரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து சிவகத்தியின் மகள் அனுஷியா கூறுகையில், "எங்கள் பகுதி ஊராட்சியில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக எங்கள் அம்மா தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஊர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் என் அம்மா போட்டியிடுகிறார்" என்றார்.

சிவசக்திக்கு ஆதரவு தெரிவிக்கும் அவரது மகள்

வெற்றியோ தோல்வியோ அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்

இறுதியாக சிவசக்தி கூறுகையில், "100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்துவருகிறேன். நான் வேலைபார்த்த கிராமத்தில் குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.

மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் எனக்கு இருக்கிறது. நானாக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை; மக்கள்தான் என்னைப் போட்டியிடும்படி வற்புறுத்தினர். என்னை எதிர்த்து எனது தாத்தா உள்பட ஆறு பேர் போட்டியிடுகின்றனர் தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்" என்றார்.

வேட்பாளர் சிவசக்தி

தேர்தலைச் சந்திக்கும் சிவசக்தி சாதிப்பாரா

கடந்த முறை குன்றத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் சிவசக்தியின் சொந்த தாத்தாவாவார். தற்போது அவரது தாத்தா மீண்டும் தலைவராகப் போட்டியிடுகிறார். குடும்பத்தில் இருவர் போட்டியிடுவது நல்லது கிடையாது என சிவசக்தியை அவரது குடும்ப உறுப்பினர் நெருக்கடி கொடுத்துவருகின்றனர்.

குடும்பத்தினரின் நெருக்கடியைத் தாண்டி சிவசக்தி தேர்தலில் களம் காண்கிறார். அதேபோல் தனக்கு கீழ் வேலை பார்த்த பெண் தலைவராகப் போட்டியிடுவதால் சிவசக்திக்கு குன்னத்தூர் ஊராட்சி அலுவலர்கள் தரப்பிலும் ஆரம்பத்தில் பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு பெண்ணாக முழு மன தைரியத்தோடு தேர்தலைச் சந்திக்கும் சிவசக்தி சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: பட்டியலின வேட்பாளரை மிரட்டிய திமுக - கமல் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.