ETV Bharat / state

கூடங்குளத்தைச் சுற்றியுள்ள குவாரிகளில் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு!

author img

By

Published : Aug 8, 2021, 6:51 PM IST

Updated : Aug 8, 2021, 7:35 PM IST

கூடங்குளத்தைச் சுற்றியுள்ள குவாரிகளில் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு
கூடங்குளத்தைச் சுற்றியுள்ள குவாரிகளில் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரின் எதிரொலியாக, கூடங்குளம் பகுதியைச் சுற்றியுள்ள குவாரிகளில் சார் ஆட்சியர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை: கூடங்குளம், ராதாபுரம் பகுதிகளில் உள்ள சுமார் 19 கல் குவாரிகளில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கனிம வளத்துறை அலுவலர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் 19 கல்குவாரிகள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் புதிய கல்குவாரிக்கான அனுமதி கோரியும் பலர் காத்திருக்கின்றனர்.

விதிமுறைகளை மீறும் குவாரிகள்

ஆனால் புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், செயல்படுகின்ற கல்குவாரிகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு முரணாக அதிக ஆழத்தில் சக்திவாய்ந்த வெடிகளால் தகர்க்கப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பாறைகளில் வெட்டி எடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் தொடர் போராட்டங்களை அப்பகுதியில் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நெல்லை வழியாக கன்னியாகுமரி செல்லும் அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கருங்கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை

விதிமுறைகளுக்கு முரணாக செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.08) சேரன்மாதேவி சார் ஆட்சியர் சிவா.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கனிமவளத் துறை துணை இயக்குநர் குருசாமி உள்பட 40க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கல் குவாரிகளில் ஆய்வுகளைத் தொடங்கி உள்ளனர்.

இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த ஆய்வில் கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பாறைகள் உடைக்கப்பட்டுள்ளனவா, அனுமதி பெற்ற நிலப்பரப்பில் தான் கல்குவாரிகள் செயல்படுகின்றனவா, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு வெளியே குவாரிகள் இயக்கப்படுகின்றனவா என்பது பற்றியும் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

அபாய நிலையில் குடியிருப்புப் பகுதிகள்

நவீன முறையில் டிபிஎஸ் கருவிகள் மூலம் கல் குவாரிகளில் அளவீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கூடங்குளம் அருகே உள்ள சூச்சிக்குளம் மக்கள் கூறுகையில், ”அருகே உள்ள கல்குவாரியில் வெடி வைப்பதினால் எங்கள் வீட்டில் சுவறுகள் கீறல் விடுகிறது. எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

கூடங்குளம் அணு உலைகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான சுரங்கப் பணிகளும் செய்யக்கூடாது என சர்வதேச அணுசக்தி கழகத்தின் விதிமுறைகள் இருந்தும், விதிமுறைகளுக்கு மாறாக கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளில் உள்ள முக்கிய ஒப்பந்தக்காரர்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு குவாரிகள் நடத்தி வருகின்றனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'

Last Updated :Aug 8, 2021, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.