ETV Bharat / state

நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு!

author img

By

Published : Jun 27, 2023, 3:03 PM IST

Updated : Jun 27, 2023, 6:15 PM IST

நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு
நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம், துலுக்கர்பட்டியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு!

நெல்லை: துலுக்கர்பட்டி அகழ்வாராய்ச்சியில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்பானை ஓட்டை ஆராய்ந்த அதிகாரிகள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு கொண்ட மக்கள் நம்பியாற்று படுகையில் வாழ்ந்து உள்ளனர் எனத் தகவல் அளித்து உள்ளனர். தமிழர்களின் பண்டைய வரலாறு குறித்தும், வாழ்வியல் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை சார்பில் ஆங்காங்கே அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நாகரிகத்தில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு பெருமையோடு பேசியிருந்தார். அதாவது வற்றாத ஜீவ நதி என அழைக்கப்படும் திருநெல்வேலி தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரை நாகரிகம் பழமையானது என்றும் பெருமையாக பேசி இருந்தார். எனவே பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் திருநெல்வேலியில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதேபோல் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகளும் தமிழர் நாகரிகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் கடந்த பல மாதங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியின்போது புலி என்ற தமிழ் வார்த்தை பொறிக்கப்பட்ட மண் பானை ஓடுகள் இருப்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

கருப்பு மற்றும் சிகப்பு நிறம் கொண்ட அந்தப் பானையில் புலி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில், தமிழி எழுத்துகளில் 'புலி' என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு, சிவப்பு வண்ண பானையோடு ஒன்று தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பொருநை ஆற்றின் கரையில் நிலவிய ஆதிச்சநல்லூர் பண்பாட்டின் காலத்தை நிலை நிறுத்துவதில் நம்பியாற்றின் அருகே துலுக்கர்பட்டியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி பெரும் துணை புரிகின்றது” என்று கூறி உள்ளார். இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள், முதல்கட்டமாக நம்பியாற்று படுகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு கொண்ட மக்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றும், தொடர்ந்து இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் குறித்து அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளில் தெரிய வரும் என்றும் கூறினர்.

இதையும் படிங்க: வேலை கொடுக்காத சமஸ்கிருதம், இந்தி தமிழகத்திற்கு எதற்கு? - நடிகை ரோகிணி கேள்வி!

Last Updated :Jun 27, 2023, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.