ETV Bharat / state

ரூ. 33 கோடியில் உருவாகும் பொருநை அருங்காட்சியகம்.. எப்படி இருக்கும்? பிரமிக்க வைக்கும் வீடியோ!

author img

By

Published : May 18, 2023, 6:27 PM IST

Etv Bharat
Etv Bharat

நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்

திருநெல்வேலி: தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி அமைந்துள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்ளை உள்ளடக்கிய பொருநை ஆற்றங்கரை நாகரிகம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் முதல் முன்னோடி நாகரிகம் என்று பொருநை நாகரிகம் போற்றப்படுகிறது. கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பொருநை நாகரீகத்தின் பெருமையை பேசினார். குறிப்பாக பொருநை நாகரிகத்தை குறிப்பிட்டு இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று பெருமையாக பேசினார்.

அது போன்ற பெருமைமிக்க பொருநை நாகரீகத்தை உலகறிய செய்யும் வகையில் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். மேலும் இந்த பொருநை அருங்காட்சியகத்தில் சிவகளை கொற்கை ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக ரூபாய் 33.02 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 13.2 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைக்கிறது. இதற்கான பணிகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

பொருநை அருக்காட்சியக கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிகாட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நெல்லையில் விழா மேடையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில், “பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இங்கு ஆதிச்சநல்லூர் காட்சி கூடம், சிவகளை காட்சி கூடம், கொற்கை காட்சி கூடம் என மூன்று வளாகங்கள் அமைகிறது. மேலும் சிற்றுண்டிச் சாலைகள், வாகன நிறுத்தம் ஆகியவைகளும் அமைக்கப்படுகிறது. கலைஞர் நூலகமும் அமையும் வாய்ப்புள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைவதால் இப்பகுதி மக்களுக்கு மிக்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். மனித நாகரிகத்தின் தொட்டில் என்ற பெருமை நெல்லைக்கு கிடைத்துள்ளது.

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிரிந்தது என கூறினார்கள் அதனை பொருநை நாகரிகம் உடைத்துள்ளது. முதல் மனித நாகரிகம் சிந்துச்சமவெளி நாகரிகம் என்பதற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பொருநை நாகரிகம் தான் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம், பொருநை நாகரிகம் அறிவியல் பூர்வமாக நிருப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியக பணிகள் 18 மாதங்களில் முடிவடையும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அறிவாலயங்களாய் திகழும் அருங்காட்சியகங்கள் - சர்வதேச அருங்காட்சியக தின சிறப்புக் கட்டுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.