ETV Bharat / state

Nanguneri issue: அரசியல்வாதிகள் சாதியை விட்டு வெளியேற வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சருக்கு பரிந்துரை

author img

By

Published : Aug 20, 2023, 11:37 AM IST

Updated : Aug 20, 2023, 12:42 PM IST

politicians should leave caste pucl organization suggest regarding nanguneri issue to tamil nadu chief minister
Etv Bharat

நாங்குநேரி சம்பவத்தில் சாதியின் அடிப்படையில் அரசியல் செய்யமாட்டோம் என்ற உறுதியை அரசியல்வாதிகள் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனை அரசு தத்தெடுக்க வேண்டும், இனிமேல் வெட்டினால்கூட அவர்கள் முன்னுக்கு வருவார்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டும் என பியூசிஎல் அமைப்பின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முரளி பேட்டி

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர் கொடுந்தாக்குதல் சம்பவம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (People's Union for Civil Liberties) ஏழு பேர் கொண்ட குழு அண்மையில் உண்மை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டு, அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது குறித்து பியூசிஎல் அமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் முரளி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

மோசமான கொடுந்தாக்குதல்: அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அடங்கியுள்ளதாகக் கருதப்பட்டாலும் அந்தப் பிரச்சனை முடிந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர் இன்னும் மருத்துவ சிகிச்சையில்தான் உள்ளார். அவரது தங்கைக்கு 13 வயது. பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கு 17 வயது. 12-ஆம் வகுப்பு பயில்கிறார். பியூசிஎல் சார்பாக ஏழு பேர் கொண்ட குழு கள ஆய்வு மேற்கொண்டது.

பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலை எப்போது தேறப்போகிறது என்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. மீண்டெழுவார், ஆனால் முழுமையாக இதிலிருந்து விடுபடுவாரா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், அவரது உடலில் ஏழு இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. குறிப்பாக தோள்பட்டையில் மிக அழுத்தமாக வெட்டுப்பட்டுள்ளது. கால்கள் வெட்டப்பட்டு, நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதற்காக சிறப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற கொடூரமான தாக்குதலை சிறுவயதில் ஒரு மாணவன் எதிர்கொள்வது மிக மோசமானதாகும்.

தாழ்வு மனப்பான்மை: சக மாணவன் இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கு ஆளாக என்ன காரணம் என்பதைப் பார்த்தால், தொடர்ந்து அந்த மாணவர், சக மாணவர்களின் தொடர் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார். நாங்குநேரியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வள்ளியூரில்தான் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில்தான் இவர்கள் பயில்கின்றனர். கடந்த 96 ஆண்டுகளாய் அப்பகுதியில் கல்விச் சேவையை ஆற்றி வரும் மிஷினரி பள்ளியாகும்.

அப்பள்ளியைப் பொறுத்தவரை ஒழுக்கக்கேடுகள் மிகக் குறைவாகவே உள்ளதென்றுதான் எங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பள்ளித் தலைமையாசிரியையும் இதனை உறுதிப்படுத்துகிறார். பாதிக்கப்பட்ட மாணவர், அப்பள்ளியில் தான் சக மாணவரால் சித்திரவதைக்குத் தொடர்ந்து ஆளாகியுள்ளார். இது வழக்கமாகவே நடந்துள்ளது. வேலையாளைப் போன்று ஏவி பல்வேறு பணிகளைச் செய்யச் சொல்லித் துன்புறுத்தப்பட்டுள்ளார். உளவுரீதியாக தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவே மாற்றப்பட்டிருக்கிறார்.

உள்ளத்தின் வலி: ஒரு கட்டத்திற்குப் பிறகு இக்கொடுமையைத் தாங்க இயலாமல், பள்ளிக்கூடம் செல்வதையே தவிர்த்துள்ளார். ஏறக்குறைய பத்து நாட்களுக்கு பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மும்பையிலிருந்து பாதிக்கப்பட்ட மாணவரின் வீட்டிற்கு வந்திருந்த அவரின் சித்தி, கேட்டபோதும்கூட ஒன்றும் சொல்லாமல், பிறகு அழுத்திக் கேட்ட பிறகுதான் பள்ளியில் தனக்கு நடந்த கொடுமைகளையெல்லாம் மாணவர் சின்னதுரை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சின்னதுரையின் தாயார் பள்ளித் தலைமையாசிரியையிடம் சென்று புகார் தெரிவித்துள்ளார். அதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதிக் கொடுத்துள்ளார். அப்பள்ளியில் உடலால் ஏற்பட்ட வலியைக் காட்டிலும் உள்ளத்தால் ஏற்பட்ட வலிதான் அம்மாணவரைப் பெரிதும் காயப்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு படிப்பதையே விட்டுவிட்டு வேறு எங்கேனும் வேலைக்குச் செல்லலாம் என்றும்கூட அந்த மாணவர் முடிவெடுத்திருக்கிறார்.

சாதிய மிரட்டல்கள்: மாணவர் சின்னத்துரை தாயாரோடு பள்ளியில் புகார் மனு கொடுத்த அன்று, எதிர்தரப்பு மாணவர்களின் ஊரில் நடைபெற்ற கொடை விழா காரணமாக யாரும் பள்ளிக்கு வரவில்லை. அதன் காரணமாக பள்ளி நிர்வாகத்தால் அம்மாணவர்கள் விசாரிக்கப்படவில்லை. ஆனால், தங்கள் மீது புகார் அளிக்கப்பட்ட விபரம் தெரிந்தவுடன் அன்று மாலை சின்னத்துரையின் வீட்டிற்கு அக்குறிப்பிட்ட மாணவர் வந்து சத்தம் போட்டுள்ளான்.

சிறிது நேரம் கழித்து அந்த மாணவரின் பாட்டி, அண்ணன் ஆகியோரும் வந்து எங்களிடம் சொல்லாமல் பள்ளிக்குச் சென்று எதற்காக புகார் கொடுத்தீர்கள் என்றெல்லாம் மிரட்டும் தொனியில் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் அந்த மாணவன் இரண்டு பேருடன் வீட்டிற்குள் நுழைந்து சின்னத்துரையின் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டுகிறான். அதனைத் தடுக்க முற்பட்டபோது கைகளிலும் வெட்டு ஏற்படுகிறது.

ஒரு வெட்டு வெட்டிய பின்னர் மற்றவர்களிடமும் அரிவாளைக் கொடுத்து அவர்களையும் வெட்டச் சொல்கிறான். அவர்களும் சின்னத்துரையை வெட்டுகிறார்கள். அப்போது அண்ணே வெட்டாதீங்கண்ணே என்று அவர்களை சின்னத்துரையின் தங்கை தடுக்க முயன்றுள்ளார். எங்களிடம் கூறும்போதுகூட, அந்தச் சிறுமி, “அந்த அண்ணன்கள் அடிப்பார்கள் என்று நினைத்தேன். வெட்டுவார்கள் என்று நினைக்கவில்லை” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளதன் மூலம், அடி என்றால் கூட தாங்கிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு அந்தப் பெண்ணின் மனோபாவம் இருந்தது தெரியவந்துள்ளது.

தொடர் வன்கொடுமை: மேற்கண்ட சம்பவத்திற்குப் பிறகு அந்த மாணவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுவிடுகிறார்கள். இதில் தொடர்புடைய ஏழு நபர்கள் மீது காவல்துறை தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சிறார் குற்றப்பிரிவில் ஆறு பேரும் மற்றும் ஒருவர் பெரியவர்களுக்கான குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில், அப்பகுதியில் உள்ள பட்டியல் பிரிவு மக்கள் தொடர்ந்து அப்பகுதியில் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நிலங்களைப் பிடுங்குதல், கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தல், உழாமல் போட்டு வைத்துள்ள நிலங்களில் அத்துமீறி ஆதிக்க சாதியினர் உழுதல் போன்ற தொந்தரவுகள் காரணமாக அப்பகுதியில் ஒரு வித அச்ச உணர்வு உள்ளது. இந்த சித்திரவதைகள் காரணமாக பட்டியல் சமூக மக்கள் அந்த ஊரைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி அங்குள்ள ஜீயர் கோவிலில் பட்டியல் சமூக மக்களுக்கு இப்போதும்கூட அனுமதியில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாத நிலையில், பள்ளி செல்லும் இளைய தலைமுறையினர் வெறும் 17 வயதே ஆன மாணவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் இதனை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதுதான் கவலையாக உள்ளது.

சாதிய வன்மம்: இது வெறுமனே கோபத்தின் விளைவாக நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த கோபத்தின் அடிநாதமாக சாதிய வன்மம் தான் உள்ளது. உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற அடிப்படையிலிருந்துதான் இந்த கோபம் வெளிப்படுகிறது. தொடர்ந்து பல நாட்களாக அந்த மாணவன் துன்புறுத்தப்பட்டதன் அடிப்படையிலிருந்து இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பகுதியில் என்னமாதிரியான மனநிலை உள்ளதோ அதேதான் அந்த மாணவனுக்குள்ளும் உள்ளது. இயல்பாகவே அந்த பகுதி சாதி மேலாதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.

இத்தனை காலமாக நிலவி வரும் இந்த மேலாதிக்கத்தை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் எங்களது கேள்வி. இதுபோன்று எத்தனை மாணவர்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் அந்தப் பள்ளியில் உள்ளது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஊருக்கு அருகில் ரெட்டியார் பள்ளி ஒன்று இருக்கிறது. அங்கு பட்டியல் பிரிவு மாணவர்களையே சேர்ப்பதில்லை என்கிறார்கள். இந்நிலையில் ஊரிலிருந்து 20 கி.மீ. பயணம் செய்து படிக்க வேண்டிய கட்டாயம் என்ன? சாதிய வன்மம் என்பது நீரு பூத்த நெருப்பாக அங்கு உள்ளது என்பதுதான் எங்களது ஆய்வில் தெரிய வந்த உண்மை.

அப்பகுதியைச் சுற்றியுள்ள 6-7 கிராமங்களில் இதே போன்ற நிலை உள்ளது என்றுதான் அந்த மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனை எப்படி போக்குவது என்பதுதான் எங்களுடைய கவலையாக உள்ளது. பள்ளிப்பருவத்திலேயே இதுபோன்ற மனோபாவம் வரத் தொடங்கிவிட்டால், அது எல்லோருக்கும் பரவ வாய்ப்பு உண்டு. திரைப்படங்களைச் சொல்லி தப்பித்துவிட முடியாது. கடந்த 17-ஆம் தேதி தூத்துக்குடி அருகே இதேபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்: இவற்றையெல்லாம் தடுத்தே ஆக வேண்டுமென்றால், அரசியல்வாதிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். எங்களைப் பொறுத்தவரை நிம்மதியான, அமைதியான, சாதி, மத வேறுபாடற்ற, நல்லிணக்கமுள்ள சமூகம் வேண்டுமென்றால், சாதியின் அடிப்படையில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம் என்ற உறுதியை அரசியல்வாதிகள் தர வேண்டும். இதுதான் எங்களது பரிந்துரையும்கூட.

மனிதநேயம், கருணை மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் குரலாகக் கருத வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் எந்தவிதமான சாதிய அடையாளங்கள் இருக்கவே கூடாது. அனைத்து சாதி மாணவர்களும் கலந்து பயிலும் வகையிலான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். மனிதநேய சிந்தனைகளை வளர்க்கக்கூடிய பாடத்திட்டங்களை, அறிஞர்கள், வல்லுநர்களைக் கொண்டு தயாரித்து வழங்க வேண்டும். இவையெல்லாம் பியூசிஎல்-லின் பரிந்துரைகளில் இடம் பெற்றுள்ளது.

கல்வித் திட்டங்களில் மாற்றம்: அதுமட்டுமன்றி எஸ்சி / எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின்படி ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படிப் பார்ப்பது? முழு வாழ்க்கையையும் அந்த சிறுவன் இழந்திருக்கிறான். அந்த மாணவனை தமிழக அரசு தத்தெடுக்க வேண்டும். அவன் என்ன படிக்க விரும்புகிறானோ அதற்குரிய இடமளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். இனிமேல் வெட்டினால்கூட அவர்கள் முன்னுக்கு வருவார்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆகையால் எந்த சமூகம் தாக்கியதோ அதே சமூகம் அதற்குண்டான இழப்பை ஈடுகட்ட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் ஏற்படக்கூடாது. இதற்கு கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். தீவிரமான கொடுந்தாக்குதலாக அறிவித்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். சிறார்கள் என்ற பார்வையில் இதனை அணுகுவது பிழையானது. பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கொடுந்தாக்குதல் என்ற அடிப்படையில் வழக்கினை முன்னெடுக்க வேண்டும் என்று காவல்துறையிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களை முன்னெடுத்தாலும், ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் நிலவும் அச்ச உணர்வைப் போக்க வேண்டும். ஏதேனும் எதிர்தாக்குதல் நிகழுமோ என்று நாங்கள் நினைப்பதற்கு மாறான நிலை அங்கே நிலவுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் கடைசி மட்ட பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருக்கும் சமூகம் எந்தவிதமான பாதுகாப்பையும் தரவில்லை.

பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்: சாதி ஒழிப்பிற்காக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். தேர்தலில் தோற்பதைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால், நாளை நாடு உங்களின் புகழ் பாடும். இதுபோன்ற விசயங்களில் தமிழக முதல்வர் சற்று கவனமாக யோசித்தால், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் சாதியைவிட்டு வெளியேறும் வாய்ப்பு உருவாகும். மதவாதம் பேசுகின்ற கட்சிகள் எல்லாம் சாதியவாதத்திலிருந்துதான் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்கிறார்கள். அந்தப் பகுதியில் அதையும் நாங்கள் உணர்ந்தோம். இதன் தொடர்ச்சியாக மேலும் பல கலவரங்களை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற ஐயப்பாடும் எங்களுக்கு உள்ளது.

இதையெல்லாம் கவனித்து தமிழக அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழா வண்ணம் பள்ளிக் கல்வித் திட்டங்களை மாற்றி, சட்டங்களை வலுப்படுத்துவது, அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டாமல் இருப்பதும் தேவையென்பதைத்தான் நாங்கள் கருதுகிறோம். என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் முரளி தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் பறிபோன மருத்துவர் கனவு... கண் கலங்கும் பழங்குடியின மாணவி!

Last Updated :Aug 20, 2023, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.