ETV Bharat / state

கைதிகள் பல் பிடுங்கிய விவகாரம்: போலீசார் கூண்டோடு மாற்றம்!

author img

By

Published : Apr 5, 2023, 9:36 AM IST

Tirunelveli
கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்

விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிதாக கூறப்படும் விவகாரத்தைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே புரம் போன்ற காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கூண்டோடு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் ஏஎஸ்பியாக இருந்த காவல்துறை அதிகாரி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி, விகேபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை கொடூரமாகப் பிடுங்கியதாக எழுந்த புகார் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளது. குறிப்பாக காவல் நிலையங்களில் வைத்து கைதிகளின் வாயில் ஜல்லிக்கற்களை போட்டு ஏஎஸ்பி கொடூரமான முறையில் பல்லை உடைத்தாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து நெல்லை ஆட்சியர் உத்தரவின் பேரில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செல்லப்பா, இசக்கிமுத்து, ரூபன் அந்தோணி, மாரியப்பன் மற்றொரு மாரியப்பன், சூர்யா, லட்சுமி சங்கர், வேத நாராயணன் மற்றும் சுபாஷ் ஆகிய 9 பேரும் இதுவரை சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அதன் பின் வழக்கின் திருப்பமாக லெட்சுமி சங்கர் மற்றும் சூர்யா இருவரும் போலீஸ் அதிகாரி தனது பல்லை பிடுங்கவில்லை என சார் ஆட்சியரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் மீதமுள்ள ஏழு பேரும் போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் தான் தங்கள் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கியதாகவும், எனவே தங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் சார் ஆட்சியரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட எஸ்பி சரணவன் அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் கல்லிடைக்குறிச்சி மற்றும் வி.கே புரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் பல்லைப் பிடுங்கும் போது ஏஎஸ்பிக்கு உதவியாகக் கைதிகளின் கைகளைப் பிடித்து வைத்திருந்த சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது போன்ற சூழ்நிலையில் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் உள்ள காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் தனி பிரிவு உதவி ஆய்வாளர்கள் தற்போது அதிரடியாகக் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரகாஷ் குமார் அதற்கான உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளார். அதன்படி பற்கள் பிடுங்கியதாகக் கூறப்படும் விவகாரம் சம்பந்தமாக அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திர மோகன், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் தனிப்பிரிவு காவலர் சந்தானகுமார், கூடுதல் தனி பிரிவு காவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன் மகாதேவி சார ஆட்சியரும் விசாரணை அதிகாரியுமான முகமது சபீர் ஆலம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் நேற்றிரவு ஆய்வு செய்த நிலையில் டிஐஜி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாகச் சார் ஆட்சியர் மற்றும் மனித உரிமை ஆணைய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் மறுபுறம் அடுத்தடுத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நடவடிக்கைக்கு உள்ளான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் விரைவில் சார் ஆட்சியர் மற்றும் மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Panguni Uthiram: ராணிப்பேட்டை ஈஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.