ETV Bharat / state

தண்ணீரை உள்வாங்கும் அதிசயக் கிணறு..முழுமையாக நிரம்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 10:48 PM IST

முழுமையாக நிரம்பிய தண்ணீரை உள்வாங்கும் அதிசயக் கிணறு
முழுமையாக நிரம்பிய தண்ணீரை உள்வாங்கும் அதிசயக் கிணறு

நெல்லை மாவட்டம் திசையின்விளையில் அமைந்துள்ள அதிசயக்கிணறு வெள்ளநீரை முழுவதுமாக உள்வாங்கி வரும் நிலையில், இந்த கிணற்றைப் பிற கிராமங்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுப் பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்க்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அனைத்து குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள் நீர்நிலைகள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. திசையன்விளை அருகே ஆனைகுடி மற்றும் ஆயன்குளம் படுகை காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பி வழிந்த நிலையில், தற்போது அதிகப்படியான உபரி நீர் வெளியேறி வருகிறது.

வெளியேறும் உபரிநீர் அப்பகுதியில் உள்ள அதிசய கிணற்றில் வடிந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வினாடிக்கு 2ஆயிரம் கன அடி தண்ணீரை உள்வாங்கிய அந்த அதிசய கிணறு, தற்போது அதைவிடவும் அதிகமான கன அடி நீரை உள்வாங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் முன்னதாக ஒரு அணையே உடைந்து வெளியேறும் முழு கொள்ளளவு தண்ணீரையும் உள்வாங்கும் அளவிற்கு ராட்சத தன்மையைக்கொண்டு அனைவரையும் மிரள வைத்தது.

கடந்த முறை இந்தக் கிணற்றின் குறிப்பிட்ட ஒரு ஓரப்பகுதியில் மட்டுமே நீர் உள்ளேச் சென்றது. ஆனால், இந்த முறை கிணற்றின் நான்கு புறம் முழுவதும் அணையில் நீர் பாய்வதைப் போல வெள்ளநீர் உள்வாங்கியது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த கிணற்றுக்குப் பல மாதங்கள் முன்பு தண்ணீர் சென்றபோதும் இந்த கிணறு முழுமையாக நிரம்பியதில்லை. ஆனால் தற்போது பெய்த கனமழையில் இந்த அதிசயக்கிணறு முழுமையாக நிரம்பியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிசய கிணற்றைக் கடந்த காலங்களில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரின் முயற்சியில் சென்னை ஐஐடி புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான குழுவினர் இந்த கிணற்றை ஆய்வு செய்தனர். ஆராய்ச்சியில் இந்த அதிசய கிணற்றுக்கு நீர் செல்வதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதையும், பூமிக்கு அடியில் நல்ல நீர் அமைந்துள்ள பகுதியில் கடல் நீர் உட்புகுவதைத் தடுப்பதையும் கண்டறிந்தனர்.

மேலும், கிணறு அமைந்துள்ள பகுதியில் பூமிக்கு அடியில் சுண்ணாம்பு பாறைகளுடன் அமைந்த நீரோடை உள்ளதாகவும், அதன் மூலம் வெள்ளநீர் வீணாகாமல் எப்படிச் சேமிக்கலாம் என்பது குறித்தும் ஆராய்ந்து முடிவுகளை அரசுக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். இந்தக் கிணற்றுக்குத் தண்ணீர் செல்வதன் மூலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசியில் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கித் தவித்த மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.