நெல்லை: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர், நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்றிரவு(மார்ச்.28) துர்கேஷ் தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென்று கேட்டுள்ளனர். துர்கேஷ் குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, அந்த இளைஞர்கள் அவரிடமிருந்த மூன்றாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக துர்கேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நெல்லை மாநகர போலீசார் வழிப்பறி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக அங்கு சென்று வழிப்பறி செய்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். உதவி ஆணையர் சதீஷ்குமார் உட்பட போலீசார் அனைவரும் மஃப்டியில் சென்று இளைஞர்களை பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வட மாநில இளைஞரிடம் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் வேறு ஏதேனும் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்கடை ஊழியர்களைத் தாக்கி 3 கிலோ தங்க நகைகள் கொள்ளை? - போலீஸ் தீவிர விசாரணை