ETV Bharat / state

சட்டத்தை நான்கரை மணி நேரத்தில் உணர்ந்த ஆளுநர் - சபாநாயகர் அப்பாவு சாடல்

author img

By

Published : Jun 30, 2023, 1:41 PM IST

Updated : Jun 30, 2023, 1:57 PM IST

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நான்கரை மணி நேரத்தில் ஆளுநர் உணர்ந்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

minister senthil balaji dismiss issue
minister senthil balaji dismiss issue

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்று வரும் நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு வருகை தந்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் தகுதி ஆளுநருக்கு இல்லை என்பதை ஆளுநர் நான்கரை மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் பதவி நீக்க விவகாரத்தில் தலையிட்டுள்ளது எனக்குத் தெரியாது. ராமர் கோயில் இடிப்பு சம்பவம் தேச துரோக வழக்காக பார்க்கபட்ட நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்களாக இருந்த முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்றோர் பதவியுடன்தான் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கினார்கள்.

இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலும் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பதவியிலிருந்து கொண்டுதான் இந்த வழக்கை சந்தித்தனர். அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை ஆளுநருக்கு இல்லை. ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும்தான் அவருக்கு உள்ளது. யார் யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற பட்டியலை ஆளுநருக்கு கொடுத்தால் அதனை ஏற்று ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது முதலமைச்சர் அவர்களை பதவியை விட்டு நீக்கலாம். அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் அவர்களை நீக்க முடியாது. வேறு யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அமைச்சர்கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது தண்டனை கிடைத்ததால் தானாகவே இந்த பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்றப் பேரவை தலைவருக்கு மட்டும்தான் உண்டு. ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில், அவரது எம்பி பதவியை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாதான் நீக்கம் செய்தார். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளது.

ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். அவர் மிகவும் நல்ல மனிதர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். நேற்று நடந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்டுதான் தேசிய கீதத்திற்கு கூட எழுந்து நிற்காமல் வெளியேறினார். தமிழ்நாட்டை தமிழகம் என்பார்கள், அதனை உடனே மாற்றிக் கொள்வார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சிதான் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 159இன்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு மதச்சார்பற்ற நாடான இந்தியாவை மதச்சார்புள்ள நாடு என ஆளுநர் பேசுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநரின் இந்த பேச்சு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆளுநர் இது போன்ற பேச்சை தெரிந்து சொல்கிறாரா அல்லது தெரியாமல் சொல்கிறாரா என்பது தெரியவில்லை. இந்த போக்கை ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே தகுதி இல்லாத நபரை முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதற்காக அப்போதைய பிரதமர், மத்திய அமைச்சரின் ஒப்புதலோடு ஆளுநரை திரும்பப் பெற செய்தார். இதனை அறிந்த ஆளுநர் பதவி விலகிக் கொண்டார்.

இதிலிருந்து அமைச்சரவை பரிந்துரையின்படி பணியாற்ற வேண்டிய கட்டாயமும், கடமையும் ஆளுநருக்கு இருப்பது தெரிகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை ஆளுநருக்கு கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதே ஆளுநரின் பதவிக்கு மாண்பைத் தரும். ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. டெல்லி சென்று வந்தார் என்பது மட்டுமே தெரியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிண்டிக்கு ஒரு கேள்வி? - சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Last Updated : Jun 30, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.