ETV Bharat / state

"பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வையுங்கள்"- டிடிவி தினகரன் அட்வைஸ்

author img

By

Published : Feb 1, 2023, 7:20 PM IST

"கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வையுங்கள்" என்று டிடிவி தினகரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வையுங்கள்"-  டிடிவி தினகரன் கருத்து
"பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வையுங்கள்"- டிடிவி தினகரன் கருத்து

பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வையுங்கள்- டிடிவி தினகரன் கருத்து

நெல்லை: தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்க ஜோதி இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ’தமிழ்நாட்டில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தும் நோக்கோடு அமமுக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பது தவறில்லை. ஆனால், கடுமையான நிதி நெருக்கடியுள்ள இந்த நேரத்தில் பேனா சின்னம் வைப்பது தான் தவறு. வேண்டுமென்றால், அவர்கள் கட்சி சார்பில் பேனா நினைவு சின்னத்தை வைக்க வேண்டும்.

கடலில் வைத்து சுற்றுச்சூழல் பாதிக்காமல் அறிவாலயத்திலோ அல்லது வேறு இடத்திலேயோ வைக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம். திமுக என்ற அரக்கனை வெளியேற்ற அதிமுக தொண்டர்கள் ஓரணியில் இணையவேண்டும்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்பதைப் பார்ப்போம். 2017-ல் நானும் ஓபிஎஸ்ஸூம் இரட்டை இலை சின்னத்திற்காக மனு செய்தோம். அப்போது தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸார் கூறுகிறார்கள்.

பாஜக ஒருங்கிணைக்க நினைத்தால் ஏன் அவர்களுக்கு ஏன் பயம் வருகிறது. தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இல்லை என்றால் சின்னம் முடக்கப்படும். ஒரு சிலர் சுயநலத்திற்காக அதிமுக மிக பலவீனமடைந்து வருகிறது. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. சிலர் சுயநலத்தோடு பணத்திமிரில் செயல்படுகிறார்கள். இதனால்தான் அதிமுக இயக்கத்தை விட்டு வெளியேறி நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிடுகிறோம்.

கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வருகின்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்காக முழு நம்பிக்கையுடன் போராடி வருகிறோம். காலம் கண்டிப்பாக தீர்வு கொடுக்கும். திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைகின்ற காலம் வரும்’ இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.