அனுமதியின்றி இயங்கிய உணவுப்பூங்கா - அதிரடி நடவடிக்கை எடுத்த நெல்லை மாநகராட்சி

அனுமதியின்றி இயங்கிய உணவுப்பூங்கா - அதிரடி நடவடிக்கை எடுத்த நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகரில் அனுமதியின்றி இயங்கி வந்த உணவுப் பூங்காவை மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் அன்சார் என்பவருக்குச் சொந்தமாக ‘நெல்லை உணவு பூங்கா’ இயங்கி வந்தது. இங்கு உணவு சார்ந்த 47 கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த உணவுப்பூங்கா அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இன்று (மே 13) நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் ஐயப்பன் மற்றும் நகர வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ரங்கநாதன் ஆகியோர்கள் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து, அனுமதியின்றி இயங்கி வந்த நெல்லை உணவுப் பூங்காவுக்கு சீல் வைத்தனர். இதையொட்டி மேலப்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே கேரள மாநிலத்தில், சவர்மா சாப்பிட்டவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மாநகரின் முக்கியப் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல், உணவுப் பூங்கா செயல்பட்டு வந்தது அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
