ETV Bharat / state

Arikomban Update: கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன்!

author img

By

Published : Jun 6, 2023, 10:26 AM IST

கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன்
கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன்

தேனி கம்பம் பகுதியில் கடந்த 10 நாட்களாக ஆட்டம் காட்டி வந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் கோதையாறு வனப் பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

கடந்த சில நாட்களாக தேனி கம்பம் பகுதியில் ஆட்டம் காட்டி வந்த அரிக்கொம்பன் யானை, நேற்று நள்ளிரவில் கோதையாறு வனப் பகுதியில் விடப்பட்டது

திருநெல்வேலி: தேனி மாவட்டம், கம்பம் வனப் பகுதியில் இருக்கும் சண்முகா நதி அணையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சின்ன ஓவலாபுரத்தில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை, சாலை மார்க்கமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று (ஜூன் 5) மாலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

அப்போது, மணிமுத்தாறு வன சோதனைச் சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை மற்றும் நாலு முக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை நள்ளிரவில் விடப்பட்டது.

இருப்பினும், அரிக்கொம்பன் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததனால், அதனை இரண்டு நாட்கள் கண்காணிப்பதற்காக வனத் துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே முத்துக்குழி வயல் பகுதியில் யானை வழித்தடம் உள்ளதாலும், அந்த வழித்தடம் வழியாக அதன் பூர்வீக இடமான கேரள வனப் பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோதையாறு அணையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் முத்துக்குழி வயல் அமைந்துள்ளது. எனவே, இங்கிருந்து எளிதாக அரிக்கொம்பன் யானை கேரள வனப் பகுதிக்குள் சென்று விடும் என வனத் துறையினர் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும், ஒருவேளை மீண்டும் தமிழ்நாட்டின் வனப்பகுதியை நோக்கி அரிக்கொம்பன் யானை வரும் பட்சத்தில், அதை கேரள வனப் பகுதியை நோக்கி விரட்டுவதற்காக வனக் குழுவினர் அங்கு முகாமில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதை உறுதி செய்யும் வகையில், நேற்று அரிக்கொம்பன் யானையை கொண்டு செல்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வனத்துறை ஜீப் முழுவதும் காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்தனர். எனவே, சுமார் ஒரு வாரம் வரை வனக் குழுவினர் அங்கு முகாமிட்டு, யானையை கண்காணிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், முகாமிட்டிருக்கும் வனத் துறையினர், அங்கு உணவு சமைத்து சாப்பிடுவதற்காகவே இந்த காய்கறிகளை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதால், வனப் பகுதியில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்கள், தங்களின் உயிருக்கு அச்சம் இருப்பதாகவும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

முன்னதாக, நேற்று அரிக்கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்ட மலைப் பாதையில் மின் வயர்கள் தாழ்வான பகுதியில் கிடந்ததால், மாஞ்சோலை, தேயிலைத் தோட்டம் மற்றும் நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கல் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Arikomban: முடிவுக்கு வந்த அரிக்கொம்பனின் ஆட்டம்.. 10 நாட்கள் வேட்டையின் முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.