ETV Bharat / state

ஊர் நாட்டாமை முறை: காதல் திருமணத்தால் முன்னாள் ஊர் தலைவர் படுகொலை- அலசும் ஈ டிவி

author img

By

Published : Jul 31, 2020, 9:57 PM IST

-nattamai-system-in-practice-in-tirunelveli
-nattamai-system-in-practice-in-tirunelveli

திருநெல்வேலி: பல நாள்களாக இருந்துவரும் ஊர் நாட்டாமை முறை அம்பலப்பட்டதையும், இந்த முறையால் முன்னாள் ஊர் தலைவராக இருந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவதில் இருக்கும் பின்னணி குறித்து ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மதியழகன் (48). இவர் கடந்த 27ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அவருடன் சென்ற சகோதரர் ரவிக்கும் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்பாசமுத்திரம் காவல்துறையினர் கௌதமபுரியை சேர்ந்த ஊர் நாட்டாமை ராஜகோபால், முருகன், முத்து, அரவிந்த், பீமாராவ், செல்வம், மதன், கணேசன், பாக்யராஜ் உள்ளிட்ட 11 பேரை மறுநாள் கைது செய்தனர்.

இந்த நிலையில் ரவி கோயிலுக்கு அபராதம் செலுத்தாத காரணத்தால்தான் ஊர் நாட்டாமை, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு ரவியின் சகோதரர் மதியழகனை கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரவி தரப்பிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:

கௌதமபுரி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் நாட்டாமை முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ஊர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அங்குள்ள முத்தாரம்மன் கோயிலை நிர்வகிப்பதுடன் ஊரில் யாராவது தவறு செய்யும் பட்சத்தில் ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி பொதுமக்கள் முன்னிலையில் ஊர் தலைவர் பாதிக்கப்பட்டவருக்கு பஞ்சாயத்து செய்வார்.

ஆரம்பத்தில் யாராவது தவறு செய்தால் பஞ்சாயத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் தவறு செய்த நபர், அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு செல்ல வேண்டும். இதுதான் அவருக்கு வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. நாளடைவில் தவறு செய்பவர்களுக்கு அபராதமாக ஊர் கோயிலுக்கு ஏதாவது பொருள்களை வாங்கி வைக்கும்படி தலைவர்கள் தீர்ப்பு வழங்கி வந்துள்ளனர்.

அந்த சமயத்தில்தான் தற்போது உயிரிழந்த மதியழகன் ஊர் தலைவராக இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்தபோது தவறுக்கு ஏற்றபடி பொருளாகவோ அல்லது பணமாகவோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள ஊர் நாட்டாமை ராஜகோபால் குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஊர் தலைவராக பதவியேற்றபோது அபராதம் செலுத்தும் முறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்கள் விஷயத்தில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரவியின் மூத்த மகள் ஷியாமளா, அதேப் பகுதியை சேர்ந்த நபருடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஊர் வழக்கப்படி இது தவறு என்பதால் அப்போதைய நாட்டாமை கிருஷ்ணன் பஞ்சாயத்து கூட்டி ரவியிடம் 1,500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளார். ஆனால் அபராதம் செலுத்த ரவி மறுத்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரவி எனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை எனது மகளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எனவே நான் அபராதம் செலுத்தமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துள்ளார்.

பின்னர் மீண்டும் பிரச்னை வந்தபோது அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் ரவி ஊரில் பிரச்னை வேண்டாம் என்றால் சொல்லுங்கள் நான் அபராதம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகே ரவி 1,500 ரூபாய் அபராதம் செலுத்தி உள்ளார். ஆனால் அபராதம் செலுத்திய பிறகும் ரவி குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து பிரச்னை செய்துள்ளனர்.

பஞ்சாயத்துக்கு பலியான முதல் உயிர்:

இதுகுறித்து ஊர் நிர்வாகிகள் கூட்டம்போட்டு பேசியதை ரவியின் இளைய மகள் பத்மபிரியா கேட்டுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின் காதல் திருமணத்திற்குப் பிறகு ஊரில் நம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்ற மனவேதனையில் பத்மபிரியா இருந்துள்ளார்.

மேலும் அண்டை வீட்டாரிடம் பேசவிடாமல் தடுத்தது, தோழிகளுடன் பழகுவதற்கு தடை என பல சம்பவங்கள் பத்மபிரியாவின் மனதை பெரிதும் பாதித்துள்ளன. இதனால் கடந்த 2017இல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்போது ரவியின் மூத்த மகள் சியாமளா குடும்பத்துடன் இணைந்துவிட்டார். எனவே மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அப்போது ஊர் நாட்டாமையாக இருந்த சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிக தொகை கேட்டதால் ரவி மீண்டும் அபராதம் செலுத்த மறுத்துள்ளார். இதன் காரணமாக ரவி குடும்பத்திற்கும் ஊர் நாட்டாமை தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக தற்போது உயிரிழந்த ரவியின் சகோதரர் மதியழகன், ஏற்கனவே ஊர் நாட்டாமை ஆக இருந்துள்ளதால் தற்போது நாட்டாமையாக இருந்து சில கணக்கு வழக்குகளை கேட்டுள்ளார். ஏற்கனவே ஊருக்கு அபராதம் செலுத்தாமல் ரவி குடும்பத்தினர் இருந்த நிலையில் கணக்கு வழக்குகளை கேட்டதால் நாட்டாமை தரப்பு மேலும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது

விவசாயி கொலை வழக்கில் ஊர் நாட்டாமை உள்பட 11 பேர் கைது!

திட்டமிட்டு நடந்த கொலை:

எனவேதான் ரவி, மதியழகனை தீர்த்துக்கட்ட நாட்டாமை ராஜகோபால் தனது ஆதரவாளர்களுடன் முடிவு செய்துள்ளார். அந்த வகையில்தான் கடந்த 27ஆம் தேதி ரவி, அவரது சகோதரர்கள் மதியழகன், அன்பரசு மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கௌதமபுரி அம்பேத்கர் சிலை அருகில் வழிமறித்து ராஜகோபால் உள்பட 12 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் மதியழகனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அதை தடுக்கச் சென்ற ரவியையும் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊர் நாட்டாமை பஞ்சாயத்து பிரச்னையால் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும்கூட கொலைக்கான மூலகாரணமான நாட்டாமை முறையை ஒழிப்பதற்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பிலோ மாவட்ட காவல்துறை அலுவலர்களோ ஊருக்கு சென்று விசாரணை நடத்தவில்லை.

இது பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதாவது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ரவி, மதியழகன் தரப்பினர் ஊர் நாட்டாமை அத்துமீறல் தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்க முடியும். இந்தச் சூழலில் இனிவரும் காலங்களிலாவது நாட்டாமை முறையை ஒழிப்பதற்கு அலுவலர்கள் முன்வராமல் இருப்பது ஊர் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கேட்டபோது, "தற்போது கரோனோ காலம் என்பதால் இந்த விஷயம் எனது கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும் இதுபோன்று புகார் வந்தால் கண்டிப்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

ஊர் தலைவர் குறித்து ஏற்கனவே பொதுமக்கள் காவல் நிலைத்தில் புகார் அளித்த சம்பவம் எனது கவனத்திற்கு வரவில்லை. நான் அப்போது வேறு மாவட்டத்தில் பணியாற்றினேன். இருப்பினும் இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்று விசாரணை நடத்திவருகிறோம். விசாரணைக்குப் பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக ஊரில் இதுபோன்று குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பது தவறு. அதுபோன்ற புகார்கள் வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

nattamai-system-in-practice-in-tirunelveli
காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்

இது தொடர்பாக கமிட்டி அமைக்கும் எண்ணமில்லை. இருப்பினும் யார் தகவல் அளித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் ஊர் நிர்வாகிகள் அபராதம் விதிப்பது சட்டப்படி தவறு" என்றார்.

அதேசமயம் இந்த பிரச்னை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை.

அதேபோல் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியனை தொடர்பு கொண்டபோது, "இது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. கலப்பு திருமணத்தால் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஊர் நாட்டாமை என்பது அதிகாரப்பூர்வமாக இருக்காது.

கோவில் திருவிழாக்கு நான்கு பேர் சேர்ந்து அதிகாரம் செய்வார்கள். நான் இந்த விஷயத்தில் தலையிட முடியாது. அதே சமயம் இதுகுறித்து என்னிடம் புகார் அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன். இதுவரை எனது கவனத்திற்கு அதுபோன்று புகார் வரவில்லை" என்று தெரிவித்தார்.

பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களை வழிநடத்தவும் நம் நாட்டில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் இன்னும் பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற ஊர் நாட்டாமை அடக்குமுறைகள் நீடித்து வருவதை இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் புகாரை காவல்துறையினர் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தி இருந்தால் தற்போது விவசாயி மதியழகன் சாவை தடுத்திருக்கலாம் என்பதே ஊர் பொது மக்களின் வேதனையான குற்றச்சாட்டாக உள்ளது.

இதையும் படிங்க... முன்னாள் ஊர் நாட்டாமை கொலை: புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.