'கைதிகள் பல்லை பிடுங்கும் பல்பீர் சிங்' - நெல்லையில் நடந்த கொடூர சம்பவம்!

author img

By

Published : Mar 27, 2023, 8:40 AM IST

District Collector ordered the Sub Collector to conduct inquiry the cruel police officer pulls out the teeth of the prisoners

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்த நிலையில், அதுகுறித்து சப் கலெக்டர் விசாரணை நடத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய கொடூர ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு, அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இவர் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சனையை செய்ததன் காரணமாக ஏஎஸ்பி பல்பீர் சிங் அழைத்துச் சென்று, காவல் நிலையத்தில் வைத்து அவரது பற்களை துடிதுடிக்க பிடுங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தற்போது சிறிய பிரச்சனை செய்ததாக கூறி அவர்களது பற்களையும் உடைத்து தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இளைஞர்களின் பற்களை உடைத்து அவரது வாயில் ஜல்லிகற்களை போட்டு கொடுமைப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும்போது, "ஒரு சிறிய வழக்குக்காக அம்பாசமுத்திரம் போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்தும், டிராக் பேண்ட் அணிந்து கொண்டும் அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லிக்கற்களை போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார். எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது, அவரது ஆண் உறுப்பை நசுக்கி கொடுமைப்படுத்தினார் அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார். எங்களுக்கு நடந்ததை போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது” என்று தெரிவித்தனர்.

மருத்துவர்களே பற்களை பிடுங்க அச்சப்படும் போது ஐபிஎஸ் அதிகாரியின் இந்த கொடூர செயல் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் வைத்தோ சிறைச்சாலையில் வைத்தோ போலீசார் தாக்கக் கூடாது என்பது சட்ட விதிமுறை ஆகும். ஆனால் விதியை மீறி பல்வேறு வழக்குகளில் போலீசார் கைதிகளை கொடூரமாக தாக்கும் சம்பவம் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

அது ஒரு புறம் இருக்க நெல்லையில் மிக வித்தியாசமான முறையில் நூதனமாக ஏஎஸ்பி கைதிகளின் பற்களை பிடுங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை முதல் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது இதனால் பற்கள் பிடுங்கிய விவகாரம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.