ETV Bharat / state

"மீண்டும் கடையம் திரும்பினான் பாரதி" - பாரதியின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்து வரும் ஓவியர்கள்!.. என்ன சிறப்பு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 7:12 PM IST

Bharathiyar life story drawing
பாரதியின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்து வரும் ஓவியர்கள்

Bharathiyar life story drawing: கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண் அடிமைத்தனத்தை சுக்கு நூறாக்கிய முண்டாசு கவிஞனின் வரலாற்றை "மீண்டும் கடையம் திரும்பினான் பாரதி" என்ற தலைப்பில் தத்ரூபமாக காட்சிப்படுத்தும் தன்னார்வலர்கள். இதுகுறித்த ஒரு சிறிய தொகுப்புக் காணலாம்.

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை வரையும் ஓவியர்கள்

திருநெல்வேலி: நாடு சுதந்திரம் பெற்றிராத 1900 காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்கள் மற்றும் போராளிகள் பல வகைகளில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர். அந்த வகையில் தனது புரட்சிகர எழுத்துகள் மூலம் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இவர் 19 ஆம் நூற்றாண்டின் பொக்கிஷம் என்றே கூறலாம். அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்பாள் தம்பதிக்கு 1882 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார் சுப்ரமணியன். சிறு வயது முதலே தமிழ் புலமை பெற்றிருந்த சுப்பிரமணியன், தனது 11 வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

இவரது தமிழ் புலமையைப் பார்த்து வியந்த எட்டயபுரத்து மன்னர் 'பாரதி' என்ற பட்டம் வழங்கியதால், அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்பட்டார். பாரதியார் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், ஆசிரியர் என பண்முகத் திறமை கொண்டிருந்தார். குறிப்பாக 1900 காலகட்டங்களில் தனது புரட்சி மிகுந்த எழுத்துக்கள் மூலம் சுந்தர வேட்கையை மக்கள் மத்தியில் புகுத்தினார்.

குடும்ப சூழல் காரணமாக சுப்ரமணிய பாரதியார் 14 வயதில் செல்லம்மாள் என்ற சிறுமியை திருமணம் செய்து கொண்டார். செல்லம்மாளுக்கு திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்ற கிராமம் தான் சொந்த ஊர். பாரதியார் பாண்டிச்சேரியிலிருந்து வெளியேறிய போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து விடுதலையானதுடன் தனது மனைவியின் சொந்த ஊரான கடையத்துக்குச் சென்றது அனைவரும் அறிந்த ஒன்றே.

கடையத்தில் பாரதியார் சுமார் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்தார். தற்போது கடையத்தில் பாரதியாரின் நினைவாக அவரது மனைவி செல்லம்மாள் வீடு அமைந்துள்ள பக்கத்து தெருவில் செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பாரதி செல்லம்மாள் இருவரும் சேர்ந்து இருக்கும் வெண்கலச் சிலை மற்றும் நூலகம் அமையப் பெற்றுள்ளன.

கடையத்தில் வசித்தபோது பாரதி மன அமைதியோடு இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் வைத்து ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்த நிலையில் பாரதியார் கடையத்தில் இரண்டு ஆண்டுகள் வசித்து சென்ற நினைவுகளை கண்முன் நிறுத்தும் வகையில், சென்னையை சேர்ந்த சிவாலயா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் கடையம் ரயில் நிலையத்தில் "மீண்டும் கடையம் திரும்பினான் பாரதி" என்ற பெயரில் பாரதியாரின் ஓவியங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

ஓவியர் மாரி தலைமையில் மாணவர்கள் தன்னார்வலர்கள் பலர் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாரதியார் கடலூர் சிறையில் இருந்து விடுதலை ஆகி நேராக கடையத்துக்கு ரயிலில் தான் வந்து இறங்கினார். எனவே கடையம் ரயில் நிலையத்தில் அவர் வந்து இறங்குவதில் தொடங்கி கடையத்தில் தனது மனைவி செல்லம்மாளின் வீட்டில் வசித்து வந்த நினைவுகள், கடையம் வீதிகளில் அவர் உலா வந்த நினைவுகள், அங்குள்ள குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய நினைவுகள் போன்ற காட்சிகளை ஓவியமாக வரைந்து வருகின்றனர்.

குறிப்பாக கடையில் வசித்த போது பாரதியார் மிகவும் வறுமையில் தவித்தார். பெண் அடிமைத்தனத்திற்கும், மூடத்தனத்திற்கும் எதிராக பாரதியார் பல்வேறு புரட்சிகளை தனது எழுத்துக்கள் மூலம் அப்போதே செய்திருந்தார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் வீதியில் நடமாடுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது. அதுவும் பெண்கள் தனது கணவர்களோடு கைகோர்த்தோ அல்லது தோளில் கை போட்டோ வீதியில் நடந்து செல்லக் கூடாது.

ஆனால் இந்த விதிகளை மாற்றி எழுதிய பாரதியார், கடையம் வீதிகளில் தனது ஆசை மனைவி செல்லம்மாளை அழைத்துக்கொண்டு அவரது தோள் மேல் கை போட்டபடி நடந்து சென்றார். வெறும் எழுத்துகளில் மட்டுமல்லாமல், செயலிலும் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் பாரதியாரின் இந்த செயல் பார்க்கப்பட்டது.

அதற்காக கடையத்தில் இருந்த உயர்சாதி வகுப்பினர் பாரதி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் பாரதியை பைத்தியம் என்றெல்லாம் திட்டி தீர்த்தனர். அவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது, என்றெல்லாம் அவமானப்படுத்தியதாக வரலாறு உண்டு. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல் தனது எழுத்துக்கள் மூலம் அனைவருக்கும் பதில் கூறினார்.

கடையத்தில் புகழ் பெற்ற கல்யாணியம்மன் கோயில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில், வயல் சூழ்ந்த ரம்மியத்தோடு அமைந்துள்ளது. இக்கோயில் முன்புள்ள பாறைகளில் அமர்ந்தபடி பாரதியார் ஏராளமான பாடல்களை எழுதினார். குறிப்பாக காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்ற புகழ்பெற்ற பாடலை பாரதியார் கடையத்தியில் இருந்து தான் எழுதினார்.

எனவே இவை அனைத்தையும் ரயில் நிலையத்தில் ஓவியர்கள் காட்சிப்படுத்தி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை சாதாரண ரயில் நிலையமாக காணப்பட்ட கடையம் ரயில் நிலையம், தற்போது பாரதியாரின் வண்ணமிகு ஓவியங்களால் ஜொலிக்க தொடங்கியுள்ளது. மேலும் பாரதியார் வீதியில் தனது மனைவி செல்லம்மாள் மீது கை போட்டு நடப்பதையும், அதை சக பெண்கள் வீட்டில் உள்ளே இருந்து ஜன்னல் வழியாக ஆச்சரியத்தோடு எட்டிப்பார்ப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஓவியர் மாரி கூறும்போது, "பாரதியார் சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் ரயில் மூலம் கடையம் வந்து இறங்கினார். இங்கு அவர் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த போது ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். கடையம் வீதிகளில் சிறுவர்களோடு கொஞ்சி விளையாடினார்.

எனவே கடையத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போதைய இளைஞர்களுக்கு நினைவு கூறும் வகையில் இந்த ஓவியம் வரைந்து வருகிறோம். ரயில்வே அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று இந்த பணிகள் நடைபெறுகிறது. மூன்று மாதத்தில் முழுமையாக ரயில் நிலையம் முழுவதும் ஓவியம் வரையும் பணிகள் முடிவடையும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 25 ஏக்கர் அளவிலான சம்பா நடவு பயிர்கள் கருகும் அவலம்.. விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.