ETV Bharat / state

"சாத்தான்குளம் போல் எங்களுக்கும் நடந்துள்ளது" - பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க புகார்!

author img

By

Published : Mar 30, 2023, 9:27 AM IST

ASP tooth pulling case Victims said that similar to the Sathankulam incident has happened to them
சாத்தான்குளம் சம்பவம் போல் தங்களுக்கும் நடந்துள்ளதாக ஏஎஸ்பி பல் பிடுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களை போலீசார் மிரட்டுவதற்கு சார் ஆட்சியரே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், சார் ஆட்சியரின் விசாரணையில் தங்களுக்கும் நம்பிக்கை இல்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் போல் தங்களுக்கும் நடந்துள்ளதாக ஏஎஸ்பி பல் பிடுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் கொடூரமான முறையில் பிடுங்குவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டிங் பிளேயர் கொண்டு தங்கள் பற்களை பிடுங்கி எடுத்ததாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கடந்து மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முதல் நபராக லட்சுமி சங்கர் என்பவர் சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர் போலீசார் தன்னை தாக்கவில்லை என்று விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சூர்யா என்ற இளைஞர் சார் ஆட்சியரிடம் ஆஜரானார் அவர் கூறும்போது, போலீஸ் அதிகாரி தன் பற்களை பிடுங்கவில்லை கீழே விழுந்ததில் தான் பற்கள் உடைந்தது என்று கூறிய சம்பவம் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பதாக அமைந்தது.

இதற்கிடையில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய போலீஸ் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு போலீசார் மற்றும் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, மாரி, செல்லப்பா, சுபாஷ், ரூபன், மாரி ஆகிய ஆறு பேர் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் துணையோடு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்தனர். ஆனால் ஆறு பேரில் சுபாஷ் தவிர மீதம் 5 பேருக்கு சம்மன் அனுப்பவில்லை என்றும் சம்மன் அனுப்பிய பிறகு விசாரணைக்கு வந்தால் போதும் என்று அவர்களை சார் ஆட்சியர் திருப்பி அனுப்பினார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த ஐந்து பேரும் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து மனுவாக எழுதி சார் ஆட்சியரிடம் கொடுத்து விட்டு வந்தனர். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சாத்தான்குளம் சம்பவத்தை போன்று எங்களுக்கு நடந்துள்ளது. போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் கட்டிங் பிளேயரை கொண்டு பற்களை புடுங்கினார். நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல வகையில் எங்களுக்கு மிரட்டல் வருகிறது” என்று கூறினர்.

இது குறித்து நேதாஜி சுபாஷ் சேனைத்தலைவர் மகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”மூன்று பேருக்கு மட்டுமே இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பியிருப்பதாக சார் ஆட்சியர் தெரிவிக்கிறார். எங்கள் தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் விசாரணைக்கு சென்ற போது சம்மன் அனுப்பவில்லை என்று சார் ஆட்சியர் கூறுகிறார். அதேசமயம் புதன்கிழமை காலை சூர்யா என்ற நபர் சம்மன் அனுப்பாமலேயே விசாரணைக்கு வந்து சென்றுள்ளார்.

சார் ஆட்சியருக்கு யாரோ அழுத்தம் கொடுப்பதாக நினைக்கிறோம் எங்கள் தரப்பைச் சேர்ந்த நபர்களுக்கு சம்மன் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதால் அந்த இடைவெளியில் போலீசார் அவர்களை மிரட்டுவதற்கு சார் ஆட்சியரே ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலரை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் லாட்ஜில் தங்க வைத்து விசாரணையில் அவர்களுக்கு சாதகமாக பேசும்படி கூறியதாக தெரிகிறது. மேலும் பணமும் கைமாறியதாக கூறப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சார் ஆட்சியர் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தொடர்ந்து எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்போம்” என்று தெரிவித்தார். ஏஎஸ்பி பல் புடுங்கிய விவகாரத்தை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்த்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தான் மேலும் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நபர்கள் தான் ஏஎஎஸ்பி பல்வீர் சிங் தங்கள் பற்களை பிடுங்கியதாக முதன் முதலில் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.

அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதன் பிறகே இந்த விவகாரத்தில் சார் ஆட்சியரை விசாரணை அதிகாரியாக நியமித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார். இது போன்ற சூழ்நிலையில் சம்பவத்தை முதலில் வெளிக்கொண்டு வந்த அமைப்பு சார்பில் அழைத்துவரப்பட்ட நபர்களை விசாரணை எடுத்துக் கொள்ளாமல் சார் ஆட்சியர் திருப்பி அனுப்பிய சம்பவம் இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் நடப்பது என்ன? - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.