ETV Bharat / state

ரூ.40 லட்சம் பணம் மோசடி விவகாரம்: அதிமுக எம்எல்ஏ இன்பதுரை எஸ்பியிடம் மனு!

author img

By

Published : Feb 27, 2021, 7:43 AM IST

AIADMK MLA Inbathurai
அதிமுக எம்எல்ஏ இன்பதுரை

திருநெல்வேலி: அரசியல் காரணங்களுக்காக பொய் புகார் அளிக்கப்பட்டது என்று அதிமுக எம்எல்ஏ இன்பதுரை எஸ்பியிடம் மனு அளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் டிவி மணி. இவர் நேற்று முன்தினம் (பிப்.25) ராதாபுரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாகக் கூறி புகார் ஒன்றை திருநெல்வேலி சரக டிஐஜி அபிநபுவிடம் அளித்துள்ளார்.

அந்த புகாரில், எனது மகன் ராஜூ மூலம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அதை திரும்ப தராமல் ரவுடிகளை வைத்து மிரட்டி வருகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்தல் நேரத்தில் அதிமுக எம்எல்ஏ மீது பணமோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மனு
அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மனு

இந்த சூழ்நிலையில் தன் மீது அளிக்கப்பட்ட புகாருக்கு எம்எல்ஏ இன்பதுரை மறுப்பு தெரிவித்துள்ளதோடு, புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (பிப்.26) திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஆன்லைன் மூலமாக மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், சென்னையில் என்னுடன் பணிபுரியும் சக வழக்கறிஞர் ராம்பிரசாத்திடம் நட்பு ரீதியாக அவ்வபோது சொந்த தேவைக்காக கடன் வாங்குவேன். அந்தவகையில் ராம்பிரசாத்திடம் 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டபோது அவர் அவருடைய நண்பர் ராஜூ வங்கி கணக்கு மூலம் பணம் கொடுத்தார். அதை திரும்ப கொடுத்து விட்டேன் இதற்கிடையில் ராம் பிரசாத் மற்றும் ராஜு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜு மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக ராம் பிரசாத் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் ராஜூ தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரத்தில் ராஜூ தரப்பினர் என்னை தொடர்புகொண்டு ராம்பிரசாத்திடம் சமாதானம் பேசி வழக்கை வாபஸ் பெற வைக்கும்படி என்னிடம் வலியுறுத்தினார். ஆனால் நான் அதில் தலையிட மாட்டேன் என்று மறுத்து விட்டேன் இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜுவின் தந்தை டிவி மணி தற்போது வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக என் மீது பொய் புகார் அளித்துள்ளார். எனவே புகார் அளித்த டிவி மணி, அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 20ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.