ETV Bharat / state

முதலமைச்சருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

author img

By

Published : Nov 30, 2020, 6:47 PM IST

  முதலமைச்சருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!
முதலமைச்சருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

தேனி: கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவதற்குப் பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். முன்னதாக இதன் நகல் தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வழங்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ARAI, ICAT போன்ற அமைப்புகளின் அனுமதியைப் பெற்ற அனைத்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளையும் பொருத்தலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

ARAI, ICAT போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒளிரும் பட்டை தயாரிப்பு நிறுவனங்கள் 11 இருக்கும் நிலையில், குறிப்பிட்ட இரண்டு நிறுவனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி பிறப்பித்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மேலும் தகுதிச் சான்றிதழ் பெறும் கனரக வாகனங்களுக்கு ஜிபிஎஸ் என்னும் வாகன இருப்பிடம் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் எனப் போக்குவரத்து ஆணையரால் கடந்த நவம்பர் 20 அன்று பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், “வெளிச்சந்தைகளில் தரமான ஒளிரும் பட்டைகள் ரூ.1,200, ரூ.1,500 வரை விற்பனையாகிறது. ஆனால் தமிழ்நாடு அரசின் அரசாணையில், கூறியுள்ள குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் ஒளிரும்பட்டை வாகனத்தின் நீளத்தைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை விற்கப்படுகின்றன.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் 140 உள்ள நிலையில், குறிப்பிட்ட 8 நிறுவனங்களுக்கு மட்டும் போக்குவரத்து ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

தரமான ஜிபிஎஸ் கருவிகள் ரூ.3,000 முதல் 4,000 வரை உள்ள நிலையில் குறிப்பிட்ட நிறுவனங்களில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்பனையாகிறது. கரோனா காலத்தில் வருவாயின்றி தவிக்கும் சூழலிலும் காலாண்டு வரி, வாகன காப்பீடு ஆகியவற்றை அரசின் ஆணைக்கிணங்க நிலுவையின்றி செலுத்திவருகிறோம்.

கர்நாடகா, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் காலாண்டு வரி விலக்களிக்கப்பட்டுள்ளதோடு, ஒளிரும் பட்டை ஒட்டுவது, ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் என்ற எந்தவித நடைமுறையும் இல்லை.

தமிழ்நாட்டில் மட்டும் புதிது, புதிதாகப் பிறப்பிக்கப்படும் ஆணைகளால் லாரி உரிமையாளர்களுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. எனவே இந்த உத்தரவுகளை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும், இல்லையென்றால் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.