ETV Bharat / state

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழுக்கு நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் கார்டு!

author img

By

Published : Oct 29, 2020, 4:06 PM IST

Updated : Oct 29, 2020, 5:13 PM IST

தேனி: போக்குவரத்து துறையால் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை இணையதளமாக்கப்பட்டு காகிதத்திற்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன

ஸ்மார்ட் கார்டு
ஸ்மார்ட் கார்டு

வாகன போக்குவரத்தில் போலிகள், விதிமீறல்களை உடனடியாக கண்டறியவும், ஆவணங்களின் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காகவும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்மார்ட் கார்டு. இதுவரை காகித வடிவில் இருந்து வந்த வாகன பதிவுச் சான்றிதழ், லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆகியவைகள் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், வர்த்தக வாகன பதிவுச் சான்றிதழ், கடன் சான்றிதழ், கடன் ரத்து சான்றிதழ், பெயர் மாற்றம் உள்ளிட்ட போக்குவரத்து சார்ந்த அனைத்து தேவைகளும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்படுகின்றன.

வாகன பதிவுச் சான்றிதழுக்கான ஸ்மார்ட் கார்டில், வாகனப்பதிவு எண், இஞ்சின் எண், சேஷிஸ் எண், பதிவு செய்த நாள், செல்லுபடியாகும் காலம், வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகனத்தின் மாதிரி, எரிபொருள் தன்மை, மாசு அளவு, தயாரிப்பாளர் விவரம், வாகனம் தயாரிக்கப்பட்ட வருடம், இருக்கைகளின் எண்ணிக்கை, வங்கிக் கடன்குறித்த விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

ஓட்டுநர் உரிமத்தில் வாகன ஓட்டியின் புகைப்படம், பெயர், முகவரி, வயது, அனுமதிக்கப்பட்ட வாகனம் இயக்கம், செல்லத்தக்க காலம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். ஏற்கனவே காகித வடிவில் உள்ள பதிவுச் சான்றிதழ், லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை தற்போது கட்டணம் செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டாக மாற்றிக்கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் கார்டு

மைக்ரோ சிப், ஹாலோகிராம், யூவி இமேஜ் வியூவர், எம்பெட்டெட் சிப், க்யூ ஆர் கோடு என பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை போலியாக தயாரிக்க முடியாது. இது தவிர தகவல் திருட்டு, மாற்றியமைக்க முடியாத பாதுகாப்பு அம்சம் என நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கார்டை வாகன ஓட்டிகள் சுலபமாக எடுத்துச் செல்லலாம்.

ஆண்ட்ராய்டு போன் அல்லது கம்ப்யூட்டர், லேப்டாப்பில் உள்ள கேமராக்கள் மூலம் ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும், வாகனத்தின் அனைத்து விவரங்களும் கிடைத்துவிடும். மேலும் தணிக்கையின்போது காவல், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடமும் இதனை காண்பித்து விட்டுச் செல்லலாம்.

இதுகுறித்து தனியார் காப்பீட்டு நிறுவன மேலாளர் மகேந்திரன் கூறுகையில்;

ஆரம்ப காலங்களில் புத்தகமாக இருந்த பதிவு சான்றிதழ், 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு இரட்டைப் பக்கங்கள் கொண்ட ஒற்றைக் காகிதத்தில் வழங்கப்பட்டன. மழை நீரில் நனைந்து பேப்பரில் உள்ள எழுத்துக்கள் அழிந்து விடுவதால் தகவல்களை அறிவதில் சிரமம் ஏற்படும். மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ஒற்றை பக்கம் எல்லாம் நிரம்பி, கூடுதல் பக்கங்கள் இணைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இவற்றையெல்லாம் களையும் வகையில் இந்த புதிய ஸ்மார்ட் கார்டு இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஏதும் சிரமம் இருக்காது. மேலும் கிரெடிட் கார்டுகளுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் கார்டு குறித்த கருத்து

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் பேசுகையில், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருந்தாலும் ஸ்மார்ட் கார்டில் உள்ள தகவல்களை எளிதில் அறிந்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. புதிய வகை ஸ்மார்ட் கார்டில் நடப்பில் உள்ள ஒரு உரிமையாளரின் விபரம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அதற்கு முந்தைய தகவல்கள் ஏதும் இருக்காது. இதனை தெரிந்து கொள்வதற்கு ஆண்ட்ராய்டு போன் அல்லது நெட் சென்டர்களின் உதவியைத் தான் நாட வேண்டி வரும். அவர்கள் கூறும் விவரங்களைத்தான் உண்மை என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இதனால் சில நேரங்களில் பழைய வாகனங்கள் வாங்கும்போது உரிமையாளர்களின் எண்ணிக்கைகளை சிலர் மறைத்து விற்று விடுவார்கள். அதனை நாங்கள் மறு விற்பனை செய்யும் சமயத்தில் குறைத்து மதிப்பிட்டு விலை பேசுவார்கள். மேலும் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டில் உள்ள விபரங்களை கண்டறிய சிரமம் ஏற்பட்டால் எங்கள் மீது தான் அதன் வெறுப்பை காட்டுவார்கள். என தெரிவித்துள்ளார்.

சாதாரண மனிதர்களும் அறிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் கார்டு இருந்தால் நிஜமாகவே ஸ்மார்ட்டாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதையும் படிங்க: மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பராமரிக்க 4 வாரத்தில் நிதி ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Oct 29, 2020, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.