ETV Bharat / state

போடி மெட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 6:28 PM IST

வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
போடி மெட்டு சாலையில் மீண்டும் தொடங்கியது போக்குவரத்து

Transport allowed in Bodimettu hill road: போடி மெட்டு கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் நேற்று இரவு முதல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சாலைகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

போடி மெட்டு சாலையில் மீண்டும் தொடங்கியது போக்குவரத்து

தேனி: போடி மெட்டு கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்ட கடலோரம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் போடிநாயக்கனூரிலிருந்து கேரளா இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் போடிமெட்டு மலைச் சாலையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டிருந்தது. சிறு சிறு மண் சரிவுகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் போடி மெட்டு சாலையில் உள்ள 8 மற்றும் 11 கொண்டை ஊசி வளைவுகளில் ராட்சச பாறைகள் சாலையில் ஒரு பகுதியில் விழுந்தது.

இதையும் படிங்க: கருமேகங்களால் சூழப்பட்டிருக்கும் வால்பாறை.. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்..

இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்களும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் கடும் சிரமத்துக்கு உள்ளானது. இந்நிலையில் இன்றும் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பதினோராவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவு மேலும் சரிவடைந்து சாலையை முற்றிலும் மறைத்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரவு முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன. அதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் குரங்கணி காவல்துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் உள்ள சரிவுகளை இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

இந்நிலையில் மழையால் தற்போது வரை பாறைகளில் ஈரப்பதம் நீடித்து வருவதால் ஆங்காங்கே சிறு சிறு மண் சரிவுகள் ஏற்படலாம் எனவும் அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், இரவு மழையின் வேகத்தைப் பொறுத்து போடி மெட்டு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: போடி மெட்டு மலைச்சாலையில் மண்சரிவு: தமிழ்நாடு-கேரளா இடையே போக்குவரத்து பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.