ETV Bharat / state

தேனியில் டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட கத்திரிக்காய்... விவசாயிகள் வேதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 7:37 PM IST

தேனியில் டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட கத்திரிக்காய்கள்
தேனியில் டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட கத்திரிக்காய்கள்

Worm Infected Eggplants: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே புழு தாக்குதல் மற்றும் அழுகல் நோய் காரணமாக டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட கத்திரிக்காய்களால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேனியில் டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்ட கத்திரிக்காய்

தேனி: போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சோலையூர் மலைக் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கத்திரிக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 60 நாள் பயிரான கத்திரிக்காய், அறுவடை செய்யப்படும் நேரத்தில் புழு தாக்குதல் நோய் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புழு தாக்குதல் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால், கடந்த 20 தினங்களுக்கும் மேல் இப்பகுதியில் பருவ காலம் தவறிப் பெய்த மழை காரணமாக, மருந்து தெளிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டு, தெளிக்கப்பட்ட மருந்துகள் மழை நீரில் கலந்து வீணாகி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதனால் புழு தாக்குதலுடன், பருவ காலம் மாறி பெய்த மழையின் அதிக ஈரப்பதம் காரணமாக, கத்திரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்துள்ளது. எனவே, இப்பகுதியில் விளைந்த கத்திரிக்காயைக் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் செடியிலிருந்து பறிக்கப்பட்ட கத்திரிக்காய், டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர் என்றால் ‘இதனை’ செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன் கூறியது என்ன?

தற்போது, கத்திரிக்காய் கொள்முதல் விலை, கிலோ ரூ.28லிருந்து ரூ.30 வரை வாங்கப்படும் நிலையில், புழு தாக்குதல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட கத்திரிக்காயைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் மறுத்து விட்டனர்.

இந்த காரணத்தினால் விளைவிக்கப்பட்டும், விற்பனை ஆகாத கத்திரிக்காய்கள் வீணாகி சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து உள்ளனர். இவ்வாறு சாலையில் கொட்டப்பட்டுள்ள கத்திரிக்காயை, இப்பகுதியில் தோட்ட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், தங்கள் வீட்டில் உள்ள மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் தீவனமாகக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கிய மூடி.. அறுவை சிகிச்சை இன்றி அகற்றிய தஞ்சை அரசு மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.