ETV Bharat / state

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்: தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

author img

By

Published : Jun 27, 2023, 9:54 PM IST

தேனியில் நோய்தொற்று அபாயம் இருந்தும் சுகாதாரத் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் ஆதங்கம்
தேனியில் நோய்தொற்று அபாயம் இருந்தும் சுகாதாரத் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் ஆதங்கம்

கேரளாவில் பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் சூழலில் தமிழக கேரளா எல்லையான தேனி மாவட்டத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேனி: கேரளாவில் கடந்த மாதம் முதல் டெங்கு வைரஸ், எலி வைரஸ் காய்ச்சல்களால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் கேரளாவில் இதுவரை 38 பேர் காய்ச்சலால் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் 22 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் பெரும்பாலான இறப்புகள் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சலால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் செவ்வாய்க்கிழமை வரை கேரள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மொத்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 1,74,222 என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலும் கேரளாவில் பரவி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பன்றி பண்ணைகளில் உள்ள பன்றிகளை கருணை கொலை செய்ய இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைத்து காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரள எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, கன்னியாகுமரியில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிப்பதுடன், வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் தேனி மாவட்ட நிர்வாகமோ, சுகாதாரத் துறையினர் சார்பாகவோ காய்ச்சல் கண்டறியும் கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாக இருப்பதால் தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கக்கூடிய போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி போன்ற மூன்று நெடுஞ்சாலை வழித்தடங்கள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

மேலும் தமிழக, கேரள எல்லை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் மற்றும் தேயிலை விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால், தேனியில் இருந்து ஜீப்புகளில் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், சுற்றுலாத்தலங்கள் அதிகமாக இருப்பதால், கேரளாவில் இருந்து தேனிக்கும், தேனியிலிருந்து கேரளாவுக்கும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சூழலில் தேனி மாவட்டத்திற்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய இடுக்கி மாவட்டத்தில் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக கேரளா எல்லையான தேனி மாவட்டத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் காய்ச்சல் ஏதேனும் தென்படுகிறதா என்பது குறித்து குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் அமைத்து தீவிரமாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.

இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.