தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாறைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 20). தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த இவர், நேற்று (அக்.18) தனது நண்பர்களுடன் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் தடுப்பணை அருகே குளித்துக் கொண்டிருந்த சவரிமுத்து, நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து, உடனிருந்த நண்பர்கள் எவ்வளவு தேடியும் அவர் கிடைக்காத நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மாயமான இளைஞர் சவரிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,755 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாலும், ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதாலும், இருள் சூழந்ததாலும் நேற்று நடைபெற்ற மீட்பு பணி இரவில் கைவிடப்பட்டது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் தண்ணீர் இன்று (அக்.19) முற்றிலும் நிறுத்தப்பட்டு, இரண்டாவது நாளாக மீட்புப் பணியை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்தனர். காலை முதல் மாலை வரை சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த மீட்புப்பணியில் மாயமான இளைஞர் தற்போது வரை கண்டெடுக்கப்படவில்லை. மாயமான இளைஞரைத் தேடும் பணி நாளையும் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாமக்கல்லில் வாக்குச் சாவடிகள் மாற்றம்: தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை!