ETV Bharat / state

காசோலை மோசடியில் ஈடுபட்ட வணிக வரித்துறை அலுவலருக்கு 10 மாதங்கள் சிறை!

author img

By

Published : Jan 26, 2021, 5:00 AM IST

வணிக வரித்துறை அலுவலருக்கு 10 மாதங்கள் சிறை
வணிக வரித்துறை அலுவலருக்கு 10 மாதங்கள் சிறை

தேனியில் காசோலை கொடுத்து பண மோசடி செய்த வணிகவரித்துறை உதவி அலுவலருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தேனி விரைவு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி: தேனி பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்த தனிக்கொடி என்பவரது மகன் தயாளன் (36). இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி தேனியில் வணிக வரித்துறை உதவி எழுத்தராக பணிபுரிந்த லதா என்பவர் குடும்ப செலவிற்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இரண்டு மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாகக் கூறி, அதற்காக முன் தேதியிட்ட காசோலையும் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில், லதா உரிய நேரத்தில் பணம் தராததால், தயாளன் காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற முயற்சித்த போது, சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பணியிடை மாறுதலாகி திண்டுக்கல் மாவட்டத்திற்கு லதா சென்று விட்டார். இது தொடர்பாக தயாளன் தேனி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று(ஜன.25) முடிந்த நிலையில், காசோலை மோசடி செய்ததற்காக வணிக வரித்துறை அலுவலர் லதாவிற்கு 10 மாதங்கள் சிறையும், 9 விழுக்காடு வட்டியுடன் ரூ 5 லட்சத்தை திரும்ப செலுத்தவேண்டும் எனவும், கடன் தொகையை செலுத்தத் தவறினால் 3 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ரூபனா தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: வழக்குப் பதிந்த காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.