ETV Bharat / state

போடி - மதுரை பயணிகள் ரயில் சேவை தொடங்கியது!

author img

By

Published : Jun 16, 2023, 7:45 AM IST

train
ரயில்

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி - மதுரை பயணிகள் ரயில் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி - மதுரை பயணிகள் ரயில் சேவை

தேனி: போடி- மதுரை இடையான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக போடி - மதுரை இடையான ரயில் சேவை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில், தேனி - மதுரை இடையான முதல் கட்ட அகல ரயில் பாதைப் பணிகள் முடிவு பெற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

அதேநேரம், போடி - தேனி வரையிலான ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 15) இறுதி கட்ட சோதனை ஓட்டத்திற்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது போடி முதல் மதுரை வரையிலான முழு பயணிகள் ரயில் சேவை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில், போடி ரயில் நிலையத்தில் போடி - மதுரை இடையான ரயில் சேவை மற்றும் போடி - சென்னை இடையேயான ரயில் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த தொடக்க விழா நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து மரியாதை தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கொடியசைத்து போடி - மதுரை மற்றும் போடி - சென்னை ஆகிய 2 ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்தனர். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடியில் இருந்து பயணிகள் ரயில் சேவை இயக்கப்படுவதால், ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தற்போது போடி முதல் மதுரை வரையிலான முன்பதிவு இல்லா பயணிகள் தினசரி ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், போடி முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான ரயில் சேவை வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல் முதல் போடி வரையிலான ரயில் சேவை வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தேனி, கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் சென்னை செல்வதற்கு மதுரை வந்து செல்ல வேண்டிய தேவை இனி இருக்காது. மதுரைக்கு விரைந்து செல்ல பேருந்தில் செல்லும் நேரமும் குறையும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "முதலமைச்சரே சிறைக்கு செல்வார்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.