ETV Bharat / state

துரைமுருகனுக்கு சால்வை போர்த்திய ஓபிஆர்; அரை மணி நேர ஆலோசனையின் பின்னணி?

author img

By

Published : Aug 23, 2019, 5:04 AM IST

ops

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் சால்வை அணிவித்த விவகாரம் சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற பொது கணக்குக் குழுவினர், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகளைப் பார்வையிடும் துரைமுருகனின் டீம், ஆய்வுக் கூட்டம் நடத்தி அலுவலர்களை முடுக்கிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேனி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த இக்குழு, வைகை அணை, அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், பசுமை வீடுகள், பாலசமுத்திரத்தில் போடப்பட்டுள்ள சாலைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் கலந்து கொண்டார்.

ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

அதன்பின்னர், துரைமுருகனை தனிமையில் சந்தித்த ஓபிஆர், கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவருடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது, தனிப்பட்ட விவகாரங்கள் மட்டுமின்றி, அதிமுகவின் உட்கட்சி நிகழ்வுகள், தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்திருக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருந்தவரை அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள், திமுக மேல்மட்ட நிர்வாகிகளை சந்திக்க நேர்ந்தால் முகத்தை திருப்பிக்கொண்டு கடந்து செல்வதை தான் தமிழகம் பார்த்திருக்கிறது. அவர் இறந்த பின்பும் கூட, ‘சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸும் ஸ்டாலினும் ஒருவரையொருவர், பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர்’, அதனால் தான் அவரின் முதலமைச்சர் பதவியை பறித்தேன் என அரிய வகை காரணத்தை வாரி இறைத்தார் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

ஆனால், அதன்பின்னர் காட்சிகள் மாறின. எந்த முதலமைச்சர் பதவிக்காக கூவத்தூர் நாடகங்களை அரங்கேற்றினாரோ, அதை அடைவதற்கு முன்பாகவே சிறையில் அடைக்கப்பட்டார், சசிகலா. கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபோது கோபாலபுரம் வீட்டின் படியேறி நலம் விசாரித்தார், ஓபிஎஸ்.

இது ஒரு புறம் இருந்தாலும், அரசியல் ரீதியாக இன்றைக்கும் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வது போல் ‘சீன்’ போடுவதற்காகவே ஸ்டாலின் நீலகிரிக்குச் சென்றார் என முதலமைச்சர் பாய்வதும், ‘உயர்ந்த பதவியில் இருப்பவர் போல் பேசுங்கள்’ என அவருக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்குவதும் என்று சமீபத்திய அரசியல் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஓ.பி. ரவீந்திரநாத் குமார்
ஓ.பி. ரவீந்திரநாத் குமார்

இந்த நிலையில், தேனிக்கு வந்த துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார், ஓபிஆர். இந்த சந்திப்பிற்கு ‘அரசியல் நாகரிகம்’ என பழைய விளக்கத்தை கொடுத்தாலும், ‘அப்போ இத்தனை நாட்கள் நாகரிகம் இல்லாமல் தான் அரசியல் செய்து வந்தீர்களா?’ என்ற எதிர் கேள்வியை சந்திக்க நேரிடும் என்பது இரு கட்சிகளின் சீனியர்களுக்குமே நன்றாகத் தெரியும்.

இருப்பினும், இச்சந்திப்பை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட, இதில் இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது. ஆம், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ‘ஹே ஸ்டுபிட், முதுகெலும்பு இருப்பவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றம். நீ உட்காரு’ என இதே ஓபிஆரை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு லெஃப்ட் ரைட் வாங்கினார். சமூகவலைதளங்களில் அந்த வீடியோ மளமளவென பரவியது.

துரைமுருகன் - டி.ஆர்.பி. ராஜா - ஓ.பி.ஆர்
துரைமுருகன் - டி.ஆர்.பி. ராஜா - ஓ.பி.ஆர்

இந்நிலையில், அவரின் மகனும், திமுக எம்எல்ஏவுமான டி.ஆர்.பி. ராஜாவும் இந்த சந்திப்பின்போது உடனிருந்திருக்கிறார். அதுவே, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூவரும், குபீரென சிரிப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

எது எப்படியோ, தேனியின் தோனி என அவரது தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும், ஓபிஆரின் கட்சிப் பதவிக்கு ஆபத்து வரமால் இருந்தால் மகிழ்ச்சி தான் என்றபடி கடந்து சென்றார் அந்த அப்பாவி அதிமுக தொண்டன்!

Intro:Body:

OPR MEET DURAIMURUGAN


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.