ETV Bharat / state

"அறிவியல், தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்" - துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேச்சு!

author img

By

Published : Jun 5, 2023, 6:16 PM IST

தமிழ்நாட்டில் கல்வி முறையை காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்றும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்என்.ரவி தெரிவித்துள்ளார். ஊட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

Ooty governor speech
கல்வி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி தலைமையில், தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று(ஜூன் 5) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது, தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், ஆய்வுப் பொருட்களை கண்டறிந்து பல்கலைக்கழகங்கள் அதனை தமிழில் மொழிபெயர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்என்.ரவி பேசும்போது, "நவீன சூழலுக்கு தேவையான கல்வி அளிப்பது தொடர்பான மாநாடு நடந்து வருகிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோது வேலை ஆட்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்து, கணினி தேவை அதிகரித்தது. இதனால் கணினி கல்வி கற்க அவசியம் ஏற்ப்பட்டது. தொலை தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு படை ஏடுத்தன. கால மாற்றத்திற்கு ஏற்ப கல்வியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், அதற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மெருகேற்ற வேண்டும். தமிழகம் வளரும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இன்றைய கால கட்டத்தித்தில் இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.

இதனால் குறைந்த ஊதியத்தில் பொறியியல் மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இளைஞர்களுக்கு காலத்திற்கு ஏற்ற கல்வி கிடைக்காததால், அவர்களின் திறன் பாதிக்கப்பட்டு, இதனால் மாநிலம் மற்றும் தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே கல்வியில் மாற்றம் அவசியம்.

தேசிய கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனருக்கு ஆங்கில மொழிப் புலமை குறைவாக உள்ளது. பள்ளி பாடத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். இந்த பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சீனா மற்றும் ஜப்பானில் தாய் மொழியில் தான் படிக்கிறார்கள். இளைஞர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதால் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். தாய் மொழியில் கற்பதை அதிகரிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் 3வது இடத்திற்கு இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே அந்நிய முதலீடுகளை கவர முடியும்.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கல்வி முறையை காலத்திற்கு ஏற்ப மாற்றி, அதன் மூலம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: உயர்கல்வியில் எந்தப் பாடத்தை நடத்துவது? சிக்கித் தவிக்கும் துணைவேந்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.