ETV Bharat / state

உயர்கல்வியில் எந்தப் பாடத்தை நடத்துவது? சிக்கித் தவிக்கும் துணைவேந்தர்கள்

author img

By

Published : Jun 4, 2023, 10:53 PM IST

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதில் எழுந்துள்ள சிக்கலால் துணைவேந்தர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தேசியக்கல்விக் கொள்கை பாடத்திட்டங்கள் குறித்து துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஊட்டி ராஜ்பவனில் நாளை கருத்தரங்கு நடைபெறுகிறது.
தேசியக்கல்விக் கொள்கை பாடத்திட்டங்கள் குறித்து துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஊட்டி ராஜ்பவனில் நாளை கருத்தரங்கு நடைபெறுகிறது.

சென்னை: உயர்கல்விக்கான பாடப்புத்தங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயார் செய்துள்ளதை பல்கலைக்கழங்களில் அமல்படுத்த வேண்டும் என ஜூன் 31ஆம் தேதி நடைபெற்ற துணைவேந்தர்கள் கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேசியக் கல்விக்கொள்கையின் (National Policy on Education) அடிப்படையில் தயார் செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு துணைவேந்தர்களுடன் ஊட்டி ராஜ்பவனில் நாளை கருத்தரங்கு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றின் கீழ் 19 மாநில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாட்டின் ஆளுநர் இருந்து வருகிறார். பல்கலைக்கழங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தேசியக்கல்விக் காெள்கையும் தமிழ்நாடும்: ஆனால், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக்காெள்கைக்கு கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கும் பணிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுப் பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 5 ஆம் தேதி ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார்.

துணைவேந்தர்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு: புதிய கல்விக் கொள்கைத் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், மாநில மற்றும் தனியார் பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களுடன் ஜூன் 31ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டம்: அப்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயார் செய்துள்ள பாடத்திட்டத்தினை அனைத்து பல்கலைகழங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 75 சதவீதம் நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தப் படிப்புகள் பிற பல்கலைகழகத்தால் நடத்தப்படும் படிப்பிற்கு இணையானது என சான்றிதழ் உயர்கல்வித்துறையால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்கலைகழங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பது என்பது அவர்களின் விருப்பம் என்றும், யாரையும் கலந்தகொள்ள வேண்டாம் என கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், துணைவேந்தர்கள் தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கைக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என நம்புவதாகவும், உயர்கல்வி மன்றம் தயார் செய்துள்ள பாடத்திட்டத்தினை அமுல்படுத்துவார்கள் என தெரிவித்திருந்தார். இதனால், பல்கலைகழங்களின் துணைவேந்தர்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் ஊட்டி ராஜ்பவனில் நாளை கருத்தரங்கில் கலந்துக் கொள்வதற்கு துணைவேந்தர்கள் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநரின் செய்தி குறிப்பு: இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை (5.6.2023 ) தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநரும், வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் விவாதிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

UGC தலைவர் பங்கேற்பு: தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், ஆய்வு கட்டுரைகள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல் - கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக் கழக மானியக்குழுவின் தலைவர் ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணைவேந்தர்களிடம் உரையாற்றுவார்.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலோக் குமார் ராய், இக்னோ (IGNOU) துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் மாற்றுவதற்கான குழுவின் தலைவருமான நாகேஷ்வர் ராவ், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் அனுவாதினி மொழிபெயர்ப்புக் கருவியின் வடிவமைப்பாளர் புத்த சந்திரசேகர் துணைவேந்தர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தாய் மொழியில் பல்கலைகழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் பாட புத்தங்களை நடத்துவது எப்படி? என துணைவேந்தர்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, “உயர்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வியுடன் பாடத்திட்டத்தில் விளையாட கூடாது. மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை இருவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையிலேயே மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் போது, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்திலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: Anna University: பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் அதிகரிப்பு.. கடந்த ஆண்டை விட 11,218 பேர் கூடுதலாக விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.