உதகையில் மீண்டும் தொடங்கப்பட்ட மலை இரயில் சேவை.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

உதகையில் மீண்டும் தொடங்கப்பட்ட மலை இரயில் சேவை.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Ooty Mountain Train: ஊட்டி மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் இயங்கத் துவங்கியது.
நீலகிரி: தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் இயங்கத் துவங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குத் தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை இரயிலில் பயணிப்பதற்கும், வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இதனிடையே கடந்த தேதி 3 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலை ரயில் கடந்து செல்லும், மலைப் பாதை அதாவது கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் எதிரொலி... நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!
இதனால் கடந்த 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை என 4 நாட்கள் மலை ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்துக் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கனமழையின் காரணமாகச் சீரமைப்பு பணிகள் சற்று தாமதம் அடைந்து வந்தன. இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை நவம்பர் 18 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனிடையே தண்டவாளப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று (நவ.19) முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. பல நாட்கள் கழித்து இன்று மீண்டும் மலை இரயில் சேவை தொடங்கியதால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
