நீலகிரி: கோத்தகிரி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு காவலாளி கொலைசெய்யப்பட்டார்.
கோடநாடு எஸ்டேட்டிற்குள் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து, அங்குப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு பங்களாவில் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது. இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட 10 பேர் பிணையில் வெளியில் உள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த நான்கு ஆண்டு காலமாக நடந்துவருகிறது. இந்த நிலையில் வழக்கில் அதிரடி திருப்பமாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கைதுசெய்தனர்.
இவர்கள் இருவரும் கோடநாடு கொலை, கொள்ளை திட்டம் குறித்துத் தெரிந்திருந்தும் அதனை காவல் துறையினர் விசாரணையின்போது மறைத்ததாகக் கைதுசெய்யப்பட்டு வழக்கில் 11ஆவது, 12ஆவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் தொடர்ந்து நீதிமன்ற காவலில் கூடலூர் சிறையில் உள்ள நிலையில் இன்று (ஜனவரி 3) மாலையுடன் நீதிமன்ற காவல் நிறைவடைகிறது. இதன்படி இன்று தனபால், ரமேஷ் ஆகியோரை காவல் துறையினர் உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து, இருவருக்கும் ஜனவரி 19ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார். இதனிடையே, இருவரையும் காவல் துறையினர் பாதுகாப்புடன் கூடலூர் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே நிபந்தனைப் பிணையில் உள்ள சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி கையெழுத்திட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலைக்கு ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் தரப்படும்- அமைச்சர் ரகுபதி பேட்டி