நீலகிரி: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி நேற்று (டிச.8) இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-17வி5 (IAF Mi-17V5) ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது.
இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி தரையிறங்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.
குன்னூரில் நிலவிய மோசமான வானிலை (கடும் மூடுபனி) காரணமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வானிலை அறிக்கையின்படி, சூலூர் IAF தளத்திலிருந்து ஹெலிகாப்டர் சென்ற வான்வழி பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. அதனுடன் அதிக ஈரப்பதம் மற்றும் லேசான மழை நிலவியது. மேலும், விபத்து நடந்தபோது சுமார் 15 டிகிரி வெப்பநிலை இருந்ததாகவும், குன்னூர் அருகே நஞ்சப்பன் சத்திரம் பள்ளத்தாக்கு முழுவதும் அடர்ந்த மூடுபனி சூழ்ந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-17வி5 (IAF Mi-17V5) ரக ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிட்ட இடத்திற்கு வராத நிலையில், வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள ராணுவ அலுவலர்கள், ஹெலிகாப்டர் மலைப்பாங்கான நிலப்பரப்பில் நுழைந்த பிறகு தொடர்பை இழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்பை இழந்த ஹெலிகாப்டர் எங்குள்ளது என்பதை அறிவதற்கான தடயங்களை தேடியதாக கூறினர்.
நஞ்சப்பன் சத்திரத்தில் வசிக்கும் மக்களிடமிருந்து நண்பகல் நேரத்தில் விபத்து தொடர்பான அழைப்பு வந்ததாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராணுவ அலுவலர்களுக்கு இத்தகவலை தெரிவித்ததாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விபத்து பற்றி அப்பகுதியைச் சேர்ந்த மதிமாறன் கூறியதாவது, ”குன்னூருடன் ஒப்பிடுகையில், இப்பகுதியில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருவதால், வெப்பம் குறைந்திருந்தது. பனிமூட்டம் பள்ளத்தாக்கை முழுவதுமாக சூழ்ந்திருந்தது. 2 மீட்டருக்கு அப்பால் இருப்பதை பார்க்க முடியாது அளவிற்கு வானிலை மோசமாக இருந்தது” என தெரிவித்தார்.
விபத்துக்கான முழுமையான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணை தொடங்கிவிட்டது. அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் விமானி, ஹெலிகாப்டரை குறைந்த உயரத்தில் இயக்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது என்ன?