மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, வேளாண் திருத்த மசோதாவின் சாராம்சங்களை விமர்சித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி விவசாயி என்று கூறிக்கொண்டு இந்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகச் சுட்டிக்காட்டி, ஆளுங்கட்சியை ஆ.ராசா வசைப்பாடினார். முதலமைச்சர் குறித்து பொதுவெளியில் அவர் காட்டமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ”2ஜி வழக்கை பற்றி பொது வெளியில் விவாதிக்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி பதில் கூறாமல் இருப்பது அழகல்ல.
சசிகலா, சுதாகரன், இளவரசி மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றம் எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கூறுவாறா?
மேலும், உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை எடுத்துக்கொண்டு திரிவது பழனிசாமிக்குத்தான் அசிங்கம். ஜெயலலிதாவை போலவே தானும் ஊழல் செய்வேன் என்று கூறி எடப்பாடி ஓட்டு கேட்பாரா?”எனத் தெரிவித்தார்.