ETV Bharat / state

நீலகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் 3 வயது சிறுமி உயிரிழப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 11:23 AM IST

Leopard attack in Gudalur
நீலகிரி கூடலூரில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு

Leopard attack in Gudalur: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சிறுத்தை தாக்கியதால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் எனப் பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அடிக்கடி பொருள்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள கூடலூர், பாண்டியாறு, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, கோத்தகிரி, நடுவட்டம், குன்னூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களில் (டேன்டீ) நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பந்தலூர் அருகே மேங்கோரேஞ் தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் கர்வா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் நான்சி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வீட்டில் கனவன் - மனைவி இருவரும் தனியார் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் காப்பகத்தில் தனது குழந்தையை விட்டுச் செல்வர். இந்நிலையில், நேற்று (ஜன.6) மாலை குழந்தைகள் காப்பகத்தில் இருந்து இவரது மனைவி 3 வயது சிறுமியான நான்சியை அழைத்து வரும் போது, காட்டுக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஆக்ரோஷமாக குழந்தையைத் தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றது.

அப்போது அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டுப் பின் தொடர்ந்து, சிறுத்தையை விரட்டி சிறுமியை மீட்டனர். பின்னர் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி சிறுமி நான்சி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுத்தைத் தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், ஏற்கனவே கீர்த்திகா என்ற நான்கு வயது சிறுமி கடந்த 4 ஆம் தேதி சிறுத்தை தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். அதுமட்டுமின்றி இதே பகுதியில் 3 பெண்களையும் சிறுத்தை தாக்கியது. அதில், ஒரு பெண் கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பகுதியில் சிறுத்தைகள் மட்டுமின்றி வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், சமீபத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களை வனவிலங்குகளில் இருந்து பாதுகாக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புளியங்குடி ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் சுவாதி பூஜை; கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.