ETV Bharat / state

இந்து திருக்கோயில்களின் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை

author img

By

Published : Aug 5, 2023, 3:15 PM IST

இந்து திருக்கோயில்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை
இந்து திருக்கோயில்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை

இந்து திருக்கோயில்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும் என தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

தஞ்சாவூர்: தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகளார் கலந்து கொண்டு புலவர் ஆதி.நெடுஞ்செழியனின் ‘தமிழுக்கும் சைவத்திற்கும் மறைமலை அடிகளின் மகத்தான பங்கு’ என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இந்துக்கோயில்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் சிதலமடைந்து உள்ள சைவ, வைணவ ஆலயங்களை கண்டறிந்து, புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த அறநிலையத் துறையை கேட்டுக்கொள்வது, திருக் கோயில்களை சிறந்த முறையில் வழி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவநந்தி அடிகளார் கூறும்போது, "தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அந்த திருக்கோயில்கள் அந்தந்த மாநில அமைப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் இந்த அமைப்பு கொண்டு செல்ல பயன்படுகிறது என கூறினார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "கோயில் என்பது தாயின் கருவறை போன்றது, தாயின் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள். பூஜை காலங்களில் அவர்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் அனைவரும் வழிபாடு செய்யும்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் குத்துவிளக்கு பூஜை.. 308 பெண்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் 6 ல் 4 பாகம் நிலம் திருக்கோயில்களுக்கும், ஆதீன மடங்களுக்கும் உள்ள நிலங்களாகும். அவர்களுக்கு ஆர்டிஆர் என்ற உரிமை உண்டு. அதன் மூலம் 90 சதவீதம் வருமானம் வரக்கூடிய நிலங்களாக உள்ளது. மேலும் இந்து திருக்கோயிலுக்கு வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்", என்றும் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மத நல்லிணக்கமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு கூறும்போது, "சேரன்மா பெருமான் நாயனார் முகமது நபி கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தியாவில் மசூதி அமைத்துக் கொடுக்கின்றார். சமய சன்மார்க்க சமத்துவத்தை நாடி திருக்கோயில் தேசிய கூட்டமைப்பில் கைகோர்த்துள்ளேன்.

இந்து மதம் என்பது மிகவும் யதார்த்தமான கண்ணியமான மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்பதற்கு இதைவிட சான்று வேறு எதுவும் இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். திருக்கோயில் கூட்டமைப்பு என்பது மதத்திற்கானது, சாதிக்கானது அல்ல. தமிழர்களாக நாம் ஒன்றாய் இணைவோம், தமிழ் இனத்தை காப்போம்”, என்று தெரிவித்தார்.

இதில் திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய பொதுச் செயலாளர் சந்திரபோஸ், தேசிய துணை தலைவர் பழனிகுமார் மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூரில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.