ETV Bharat / state

அரசு கொடுத்த நெல் ரகங்களால் பெரும் நஷ்டம்.. குழந்தை போல் வளர்த்த பயிர்களை டிராக்டர் விட்டு அழித்த விவசாயிகள்.. தஞ்சையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 10:45 PM IST

Etv Bharat
Etv Bharat

Tanjavur Farmers: அரசு வழங்கிய சிஆர் 1009, ஏடிடீ 51 விதை நெல்களை பயன்படுத்தி சம்பா சாகுபடி செய்த கும்பகோணம் விவசாயிகள் போதிய வளர்ச்சியில்லாததால் நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு கண்ணீருடன் அழித்தனர். அரசு அதிகாரிகள் வழங்கிய ரகங்களை பயிரிட்டும் உரங்களை போட்டும் பயிர்கள் அழுகும் நிலையில், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளனதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் விவசாயிகளின் வேதனைகளை விளக்கும் தொகுப்பு

தஞ்சாவூர்: அரசு வழங்கிய சிஆர் 1009, ஏடிடீ 51 விதை நெல்களை பயன்படுத்தி சம்பா சாகுபடி செய்த கும்பகோணம் விவசாயிகள், நெற்பயிர்கள் போதிய வளர்ச்சியின்றி பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளானதால் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து வேளாண் அதிகாரிகள் உரிய பதிலளிக்காததால், செய்வதறியாத விவசாயிகள் குழந்தை போல, வளர்த்த நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்த படி, கண்ணீர் வடிக்கின்றனர்.

இப்பகுதியில் பல விவசாயிகளுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் சாகுபடி செய்ய பணத்திற்கு என்ன செய்வது என விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே, வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அரசு உரிய கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசின் விதை நெல்கள்: கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி கிராமத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இங்கு ஏடிடீ 51, சிஆர் 1009 ஆகிய 160 நாட்கள் கொண்ட நெல் ரகங்கள், டிஏபி ரகங்கள் என வேளாண்துறை வழங்கிய விதை நெல்களை கொண்டும், வழங்கிய உள்ளிட்ட உரங்களை கொண்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 55 நாட்களை கடந்த நிலையில், பயிருக்கு போதுமான வளர்ச்சி இல்லாத நிலையில் பயிர்கள் குன்றிய நிலையில் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

வளர்ச்சியின்றி குன்றிப்போன பயிர்கள்;வேதனையுடன் விவசாயிகள்: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சேதுராமன், 'கடிச்சம்பாடி கிராமத்தில் அரசு விற்ற சிஆர் 1009, ஏடிடீ 51 விதை நெல்களை வாங்கி சம்பா சாகுபடி செய்தோம். ஒரு மாதத்தை தாண்டிய நிலையில், பயிர்கள் வளர்ச்சியில்லாமல் குன்றிப்போய் உள்ளன. அரசு தந்த ஏடிபி ரக உரங்களையும் போட்டு விட்டோம்; இருந்தும் பலனில்லை.

விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம்: 6 ஏக்கரில் பயிரிட்ட இந்த நெற்பயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துவிட்டேன். இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அலட்சியமாக பதிலளிக்கவில்லை. தங்கள் பகுதியில் 100 ஏக்கர் வரையில் இது போன்ற பாதிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என அவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கேட்டால் அதிகாரிகள் அலட்சியமான பதில்: இதுகுறித்து வேளாண்துறையினரை கேட்டால், அவர்கள் டிஏபி அதிகம் பயன்படுத்த வேண்டாம்; இதனால், கூடுதல் பாசி பிடிக்கிறது என்கின்றனர். டிஏபி உரம் போட்ட பிறகே, இதனை வேளாண்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த காலகட்டத்தில் மழை பெய்து இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், பெய்யவில்லை என தங்களது பொறுப்பை அலட்சியமாக தட்டிக்கழிக்கின்றனர். இதற்கு மாற்று வழிமுறைகளை சொல்லி, அவர்களுக்கு மேலும் இழப்பு ஏற்பாடாமல் காப்பாற்றுவதை விட்டு அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் கடிச்சம்பாடி பகுதி விவசாயிகளுக்கு மட்டும் பல நூறு ஏக்கரில், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வழிபிதுங்கி நிற்கின்றனர்.

கடன் வாங்கவும் வழியில்லை; இவரைத்தொடர்ந்து பேசிய விவசாயி தனபால், 'குழந்தை போல வளர்த்த பயிரை அழித்து விட்டு மறு நடவு செய்ய மனம் இல்லாத நிலை ஒருபுறம், அடுத்து அப்படி மீறி அழித்தாலும் அடுத்து மறு நடவிற்கு குறைந்தபட்சம் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 முதல் 25 ஆயிரம் வரை செலவாகுமே, அதற்கு யாரிடம் சென்று கடன் கேட்பது; அடகு வைக்க கூட நகை இல்லையே என்ற பரிதாப நிலையில் உள்ளோம்.

உரிய இழப்பீடு வழங்குக; முதலமைச்சருக்கு கோரிக்கை: இந்த கடிச்சம்பாடி கிராமத்தில் மட்டுமல்ல, இதனை சுற்றியுள்ள திருநல்லூர், பரட்டை, கல்லூர், தேவனாஞ்சேரி, ஆலமன்குறிச்சி, அகராத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதே நிலை தான் காணப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவழித்து விட்டு, முதலுக்கே மோசமானதே என்ற நிலையில் வாய்விட்டு அழ முடியாத சூழ்நிலையில் தத்தளிக்கின்றோம். இதனால், தனக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசு இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்' என்றார்.

இப்பகுதியில் வேளாண்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தஞ்சை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு, இப்படி பாதிக்கப்பட்ட சாகுபடி வயல்களை நேரடியாக கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க முன்வர வேண்டும் என இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று பல விவசாயிகள் வேறு வழியின்றி, குழந்தை போல பாவித்து வளர்த்த இளம் பயிர்களை மனமின்றி கை டிராக்டர் உதவியோடு அழித்து, மறு நடவு பணிக்காக வயல்களை கண்ணீரோடு தயார் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: சீட்டு முடிந்ததும் பூட்டு போட்ட பிரபல நகை கடை;சென்னையில் நகை சீட்டு கட்டியவர்கள் போலீசில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.