ETV Bharat / state

கும்பகோணத்தில் நூதன முறையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

author img

By

Published : Dec 10, 2022, 5:21 PM IST

கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 11ஆவது நாளாக ஒற்றைக் காலில் கொக்கை போல நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

நூதன போராட்டத்தில் விவசாயிகள்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட திருமண்டங்குடியில் செயல்பட்ட திருஆரூரான் சர்க்கரை ஆலை 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு அரவைக்கு அனுப்பிய வகையில், கரும்பு நிலுவைத்தொகையான ரூபாய் நூறு கோடியை இன்னும் விவசாயிகளுக்கு தராமல் நிலுவையாக வைத்துள்ளது.

இது தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளின் பெயரில் பல்வேறு வங்கிகளில், ஆலை நிர்வாகம் ரூபாய் 300 கோடி அளவிற்கு கடன் பெற்று பயனடைந்து விட்டு அந்த தொகையினை திரும்பிச் செலுத்தாமல் உள்ளதால், தாங்கள் பெறாத கடனிற்காக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கும், துயரத்திற்கு ஆளானதுடன், தங்களது வங்கிக் கணக்கில், வங்கி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விரண்டு வகையிலும் கரும்பு விவசாயிகளுக்கு திருஆரூரான் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூபாய் 400 கோடியை இந்த ஆலையை தற்போது விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 30ஆம் தேதியிலிருந்து இந்த சர்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகள் இரவு பகல் பாராது, கடும் பனி, மழையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தின் 11ஆவது நாளான இன்று (டிச.10) தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் காசிநாதன் தலைமையில், மாநில செயலாளர் முருகேசன் முன்னிலையில், ஏராளமான கரும்பு விவசாயிகள் 11ஆவது நாள்களாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை ஆலை நிர்வாகமோ, தமிழ்நாடு அரசோ கண்டுகொள்ளாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இன்று நூதன முறையில், கொக்கை போல ஒற்றைக் காலில் நின்று, தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி நூதன முறையில் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்தனர். நிலுவைத் தொகை மற்றும் வங்கி கடனை முழுமையாக ஆலை நிர்வாகம் வழங்க முன்வராவிட்டால், ஆலையை விவசாயிகளிடமே ஒப்படைக்க, உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தொடர்ந்து இப்போராட்டம் வாயிலாக வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: சென்னை காவல் துறையின் CCTV-களை சேதப்படுத்திய மாண்டஸ் புயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.