தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அப்போது, தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி, இனி எம்.எஸ்.சுவாமிநாதன் கல்லூரி என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல், இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், ‘வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஏற்றவாறு பயன்படுத்தும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி, உலகளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து உலகளவில் புகழ் பெற்றவர். பத்ம விபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்று உள்ளார். அவரது நினைவைப் போற்றுகின்ற வண்ணம், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்றார்.
அதில், “தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் செயல்படும்” என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அக்கல்லூரி முதல்வர் வேலாயுதம் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர். வேளாண் விவசாயிகளுக்கு அரும்பணி ஆற்றியவர்.
குறிப்பாக, பெண் விவசாயிகளுக்கு நிறைய தொழில்நுட்பங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வித்திட்டவர். அவரது பெயரில் இந்த கல்லூரி அழைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வருக்கு கல்லூரி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி