ETV Bharat / state

பெயர் குழப்பம் - நீட் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவர்.. கண்ணீருடன் வீடு திரும்பிய சோகம்!

author img

By

Published : May 7, 2023, 4:44 PM IST

Updated : May 7, 2023, 5:36 PM IST

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூரில், பெயர் குழப்பம் காரணமாக நீட் தேர்வு எழுத வந்த மாணவர் வேறு தேர்வு மையத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து 40 கி.மீ., தூரம் உள்ள மற்றொரு தேர்வு மையத்திற்குச் சென்ற நிலையில் நேரம் தாமதத்தின் காரணமாக அவரை தேர்வெழுத அனுமதிக்காத அவலம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு மையத்தின் பெயர் குழப்பம் காரணமாக நீட் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த மாணவர்

தஞ்சாவூர்: தேசிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு (Neet Exam) இன்று (மே 07) நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 05.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு விதிமுறைப்படி 01.30 மணி வரை மட்டும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தாமரை சர்வதேச பள்ளி என்ற ஒரே பெயரில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என 40 கி.மீ., தூர இடைவெளியில் இரு பள்ளிகள் இயங்குகின்றன.

இருபள்ளிகளுமே நீட் தேர்வு மையங்களாக உள்ளன. ஆண்டுதோறும் தஞ்சை செல்ல வேண்டியவர்கள் கும்பகோணத்திற்கும் கும்பகோணத்திற்குச் செல்லவேண்டியவர்கள் தஞ்சைக்கும் செல்வதும் என பல மாணவர்கள் நேரம் கடந்து வந்து, தேர்வு எழுத முடியாமல் கண்ணீருடன் வீடு திரும்புவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஏகாம்பாள் மகள் தேன்மொழி, கடந்தாண்டு நீட் தேர்வில் 501 மதிப்பெண் பெற்றும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் தான் சேர வேண்டும் என்ற கொள்கையோடு இம்முறை தேர்வு எழுதத் தயார் செய்திருந்தபோதும், அவர்கள் தஞ்சை மையம் என அங்கு சென்ற பிறகு, அங்கிருந்து கார் மூலம் கடைசி கட்டத்தில், சரியான நேரத்திற்கு கும்பகோணம் தேர்வு மையத்திற்கு வந்தனர்.

இதனால், தேன்மொழி மற்றும் அவரை போல தஞ்சாவூரில் இருந்த மற்றொரு மாணவனும் கடைசி நேரத்தில் வந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றொரு மாணவனான பூபேஷ் என்பவரும் பெயர் குழப்பத்தில் தஞ்சாவூர் சென்று, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில், 45 நிமிடங்களில் தனியாக பயணித்து கும்பகோணம் தேர்வு மையத்திற்கு 01.57 மணிக்குச் சென்றார்.

அவரை தேர்வு விதிமுறைகளைக் காரணம் காட்டியும், அங்கிருந்த அலுவலர்கள் தங்களது மேல் அலுவலர்களை தொடர்புகொண்டு கேட்ட பிறகும், சுமார் 27 நிமிடங்கள் தாமதமாக வந்த பூபேஷை தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால், கண்ணீருடன் தஞ்சையில் உள்ள வீட்டிற்குச் சென்றார்.

அப்போது அவர் கூறுகையில், “தான் தஞ்சையைச் சேர்ந்த மாணவன். எனக்கு தஞ்சையில் உள்ள தாமரை சர்வதேச பள்ளி தான் தேர்வு மையம் என நினைத்து அங்கு சென்றபோது தான், அதே பெயர் கொண்டு 40 கி.மீ தொலைவில் கும்பகோணத்தில் உள்ள பள்ளி தான் எனக்கான மையம் என அறிந்தேன். பிற்பகல் 01 மணிக்குப் பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தனியாக 45 நிமிடங்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தேர்வு மையத்தை 01.57 மணிக்கு வந்தடைந்தேன்.

இருந்தபோதிலும், 01.30 மணி வரை மட்டுமே அனுமதிக்க முடியும். தாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என அங்கிருந்து அலுவலர்கள், தங்களது மேல் அலுவலர்களை தொடர்புகொண்டு கேட்டு, அவர்கள் கருத்துப்படி என்னை அனுமதிக்க முடியாது எனத் திருப்பி அனுப்பிவிட்டனர். மைய பெயர் குழப்பத்தால் தான் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது” என மாணவன் பூபேஷ் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், மாணவ மாணவியர்களுடன் வரும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு தேர்வு மையத்தில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். அங்கு அவர்களுக்கு தேர்வு முடியும் வரை, காத்திருக்க நிழல் பந்தல் கூட இல்லை, குடிக்க குடிதண்ணீர் வசதி கூட இல்லை எனப் பல பெற்றோர் தங்களது ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 இடங்களில், மொத்தம் 5ஆயிரத்து 440 மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில், கும்பகோணத்தில் மட்டும் தாமரை சர்வதேச பள்ளியில் 648 தேர்வர்கள், அரசு பொறியியல் கல்லூரியில் 648 தேர்வர்கள், மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 360 தேர்வர்கள் என மொத்தம் ஆயிரத்து 656 மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 12th Result: தமிழ்நாட்டில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - SMS-ல் அறிந்து கொள்ளலாம்!

Last Updated :May 7, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.