ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலக்கிய தஞ்சாவூர் வீரர்.. குவியும் பாராட்டுகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 5:08 PM IST

Updated : Jan 12, 2024, 6:01 PM IST

தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலக்கிய தஞ்சாவூர் வீரர்
தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலக்கிய தஞ்சாவூர் வீரர்

National level cricket tournament for differently abled: தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய தஞ்சாவூர் வீரர் பாலசுந்தருக்கு எம்.பி பழனிமாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கிரிக்கெட் விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலக்கிய தஞ்சாவூர் வீரர்.. குவியும் பாராட்டுகள்!

தஞ்சாவூர்: வேர்கள் ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம், அதேபோல் தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் நம் வாழ்க்கையின் உயர்வுக்கு மூலாதாரம், நடக்கும் பாதைகளை முதலில் சீராக்கிவிட்டால் போதும், அதன்பின் சாதனை என்ற ஒன்று மிகவும் சாத்தியமானது, இதை அறிந்து, நாம் நடை போடும் பாதையைத் தீர்மானித்தாலே போதுமானது, வெற்றி என்ற இலக்கை மனதில் நிலை நிறுத்தி ஓடும் போது தோல்வியினால் தடுக்கி விழுந்தாலும் நம்பிக்கை என்ற கரங்கள் நம்மை மேலே ஏற்றும், அப்போது, நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நிரூபித்துள்ளார் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுந்தர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சுந்தர் (வயது 27) மாற்றுத்திறனாளியான, இவர் சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்குப் பிறந்தது முதல் இடது கை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி இறந்துவிட்ட நிலையில், தாய் விஜயா பள்ளி சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். பாலசுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் தீவிரமான பயிற்சி மேற்கொண்ட பாலசுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

இவரது கிரிக்கெட் ஆர்வத்திற்கு, இவரது குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி தகுதித் தேர்வில் விளையாடி 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து பாலசுந்தர் தேர்வு பெற்றார். இதே போல், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி, சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆக்ராவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தேசிய அளவில் நடந்த இந்தியா, நேபால் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காகத் தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, இந்திய மற்றும் நேபாள அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில், பாலசுந்தர் இருந்த இந்திய அணி நேபாள அணியை அபாரமாக வெற்றி கொண்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் பாலசுந்தருக்கு, எம்.பி பழனி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கிரிக்கெட் விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது, மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கிரிக்கெட் வீரர் பாலசுந்தருக்கு கிராமப் பொதுமக்கள் சார்பில் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “கால்நடைத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்”..அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

Last Updated :Jan 12, 2024, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.