ETV Bharat / state

சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிரை மீட்ட தாய் - தஞ்சையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

author img

By

Published : Jul 7, 2023, 3:00 PM IST

mother-donated-a-kidney-and-saved-her-son-in-tanjore
சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிர்மீட்ட தாய்! தஞ்சையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மகனுக்கு சிறுநீரக தானம் செய்து தாயார் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சிறுநீரக தானம் கொடுத்து மகன் உயிரை மீட்ட தாய் - தஞ்சையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது, மூக்கு தொண்டை, அறுவை சிகிச்சைப் பிரிவில் பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேட்காத ஆறு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கோக்லியர் காது அறுவை சிகிச்சை எனும் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

காது கேளாத குழந்தைகளால் பேச இயலாது. எனவே இந்த குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு முழு தீர்வு கிடைக்கும். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 18 பேருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, ''தஞ்சை மாவட்டம் முழுவதும் செவித்திறன் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளை பிறந்தவுடன் பரிசோதனை செய்து டிஜசி எனப்படும் சிகிச்சை மூலமாக கண்டறியப்பட்டு, அதற்கு உண்டான அறுவை சிகிச்சையான கோக்லியர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ஏறக்குறைய 50 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை செய்வதற்கு ஐந்து லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

சிகிச்சைக்குப் பின், தொடர்ந்து குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் குழந்தைகள் நல்ல முறையில் தற்போது பேசி வருகின்றனர். மேலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக உறவினரால் தானமாக வழங்கப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நேற்று ஜுலை 6ஆம்தேதி செய்யப்பட்டது.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த 37 வயதுடைய ஆண் நபருக்கு, 57 வயதுடைய அவரது தாயார் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பேச்சு மற்றும் செவித்திறன் பெற்று பயன்பெறுங்கள்’ என மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கேட்டுக் கொண்டார்.

பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் தூய்மைப் பணியாளர் நல வாரியம் மூலம் சுமார் 200 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் மூலம் தொற்றா நோய் மற்றும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவர்கள்,அலுவலர்கள், கண்காணிப்பாளர், துறைத் தலைவர் , குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.