ETV Bharat / state

தண்ணீரின்றி தவிக்கும் தஞ்சை விவசாயிகள்.. கருகும் பாய் நாற்றங்கால்.. அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 6:33 PM IST

பாதிப்படைந்த பாய் நாற்றங்கால் தயாரிப்பு பணி
பாதிப்படைந்த பாய் நாற்றங்கால் தயாரிப்பு பணி

Seedbed production in Thanjavur: தஞ்சாவூர் மாவட்டம் மேட்டூரில் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா சாகுபடிக்கு பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தண்ணீரின்றி தவிக்கும் தஞ்சை விவசாயிகள்

தஞ்சாவூர்: நாற்று நடுவற்கு முன்பே காய்ந்து வரும் பாய் நாற்றங்கால், தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் நாற்றங்கால் தயாரிப்பு தற்போது வெறும் 15 ஏக்கரில் மட்டுமே நடைபெறுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடி பணிக்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து ஜூன் 16ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5.28 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி நீரின்றி கருகி வருகிறது.

இதனால் குறுவை சாகுபடி அறுவடை செய்ய முடியுமா? என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது சம்பா சாகுபடிக்கான காலம் தொடங்கி விட்டதால், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்காமல் உள்ளனர். காவிரியில் போதிய தண்ணீரும் இல்லை, பருவமழையும் இன்னும் தொடங்கவில்லை இந்த சூழலில் சம்பா சாகுபடியை தொடங்கலாமா, வேண்டாமா என்று விவசாயிகள் குழப்பமடைந்து உள்ளனர்.

இதனால் தஞ்சை மாவட்டம் களிமேடு அருகே சம்பா சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறுவை, சம்பா சாகுபடி காலத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாய் நாற்றங்கால் தயார் செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்தோம். ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் யாரும் நாற்றங்காலுக்கு முன்பதிவு இதுவரை செய்யவில்லை.

இதனால் வெறும் 15 ஏக்கரில் மட்டுமே பாய் நாற்றங்கால் தயார் செய்துள்ளோம். தமிழக அரசு கர்நாடக அரசிடமிருந்து தண்ணீர் பெற்று தந்து விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சாகுபடி பணியை செய்ய முடியும். மழையும் இல்லை, மழை பெய்தால் நாற்றங்கால் நடவு செய்து பின்னர் தண்ணீர் விட முடியும். போர்வெல் பாசனம் மட்டுமே தற்போது செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்று பாசனம் செய்ய முடியவில்லை.

மேலும் நாற்றங்கால் வாங்க விவசாயிகள் யாரும் இதுவரை வரவில்லை. பாய் நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு 30 நாட்கள் மேல் ஆகிவிட்டது. தற்போது நாற்று முற்றி காய்ந்து வருகிறது. இனிமேல் இதனை நடவு செய்தாலும் பயிர் வளராது” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“மேலும் இக்காலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் பாய் நாற்றங்கள் உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஆட்கள் குறைவாக வேலை செய்து பாய் நாற்றங்கால் பணி வெறிச்சோடி காணப்படுகிறது” என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Bronze Nataraja statue: சாலை மார்க்கமாக புதுடெல்லிக்கு புறப்பட்டது உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.