கும்பகோணம்: மாநகர திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 'கும்பகோணம் சிங்கப்பூராக மாறும் என்ற ரீதியில் வாயிலேயே வடை சுடுவதில் வல்லவர், நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. அவர் கடந்த 9ஆண்டுகளாக மாவே இல்லாமல் களி கிண்டிக்கொண்டு இருக்கிறார். கறுப்புப் பண மீட்பில், ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவேன் என்று சொல்லிவிட்டு, ஒரு ரூபாய் கூட தராத பிரதமர் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கவுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்.
இதையும் படிங்க :இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் - சிறையை முற்றுகையிட்ட தமுமுக!
இது தான் பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம். பெங்களுரூவில் நாளை நடைபெறவுள்ள, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணிக்குத் தலைமை தாங்கவுள்ளார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
இந்திய அரசியலை மாற்றப்போகும் தலைவர் மு.க.ஸ்டாலின். இவர் அடையாளம் காட்டுபவர் தான் 2024ல் பிரதமர். மதவெறி பாஜகவை நாட்டைவிட்டே துரத்த நாம் அனைவரும் சபதமேற்போம்.
ஈபிஎஸ், ஓபிஎஸ், என்ற இரு அணியால் பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என பேசும் அளவிற்கு, கொள்கை இழந்த கட்சியாக அதிமுக உள்ளது.
திமுக மக்கள் உருவாக்கிய இயக்கம். அதனால் தான் இன்று அது ஆலமரம் போல நிற்கிறது. என்னைப் போன்ற சாமானியர்கள் கல்வி கற்க உதவியதுடன், 33 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி, இன்று பாடநூல் கழகத் தலைவராகவும் வர காரணமாக அமைந்தது, கலைஞர் கருணாநிதி தெடாங்கிய பிற்பட்டோர் நலத்துறை. பெண்கள் தேர்தலின் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தது, கலைஞர்.
திமுகவின் தாய் கட்சியான நீதிக்கட்சி பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியது. அதனை திமுக அரசு, இன்று அரசுப் பள்ளியில் பயின்று, கல்லூரியில் பயிலும் 2.5 லட்சம் மாணவியர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது' என்றும் குறிப்பிட்டார் லியோனி.
இப்பொதுக்கூட்டத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஐ.லியோனி பிரதமர் மோடி குறித்த பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க :திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!