ETV Bharat / state

"பருத்திக்கு நியாயமான விலை இல்லை"... கண்டு கொள்ளாத கவர்மெண்ட் - விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Jul 13, 2023, 11:22 AM IST

thanjavur news
பருத்திக்கு நியாயமான விலை வேண்டி விவசாயிகள் கோரிக்கை

பருத்திக்கு நியாயமான விலை வழங்கிட வேண்டி சுமார் ஒன்றரை மாதங்களாக கோரிக்கை விடுத்தும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை கண்டு கொள்ளாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

பருத்திக்கு நியாயமான விலை இல்லை என விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று (ஜுலை 12ஆம் தேதி) நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் விவசாயிகளுக்கு கட்டுப்படியான நியாயமான விலை தொடர்ந்து 5வது வாரமாக இவ்வாண்டும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு நல்ல விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்த போதும் இதனை, இரு அரசுகளுமே கண்டு கொள்ளாமல் இருப்பது பருத்தி விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 12 ஆயிரம் வரை விலை கிடைத்தது. ஆனால் இவ்வாண்டு அதில் 45 முதல் 50 சதவீதம் குறைந்தே விலை கிடைக்கிறது. இது தவிர கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இடுபொருட்கள் விலை, விவசாய கூலி, தொழிலாளர்கள் சம்பளம், டீசல் விலை என அனைத்தும் உயர்ந்துள்ளது

இந்நிலையில், பருத்தி விலையை கடந்த ஆண்டை விட சரி பாதியாக குறைத்து நிர்ணயம் செய்வது பருத்தி விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெல்லை, அரசே கொள்முதல் செய்வதை போல, பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், பருத்தி விவசாயிகளிடம் முதன்மையாகவுள்ளது.

பருத்தி ஏலம் தொடங்கிய இந்த 5 வாரங்களும், பருத்தி வியாபாரிகள் மத்திய அரசின் விலையை விட குறைவாகவே விலை நிர்ணயம் செய்கின்றனர். இது கடந்த ஆண்டு விலையை காட்டிலும் சுமார் 40 முதல் 45 சதவீதம் குறைவானதாகும். இந்நிலையில் கும்பகோணம் கொட்டையூர் பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று 1500 விவசாயிகள் கொண்டு வந்த 2,269 லாட்டுகளின் மூலம் 3,850 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கான அதிகபட்ச விலைகளை பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பருத்தி வணிகர்கள் 16 பேர் நிர்ணயம் செய்தனர். இதில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக 6,689 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக 5,119 ரூபாயும் சராசரி விலையாக ரூபாய் 6,275 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தியாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி தினேஷ் கூறுகையில், "போனவார விலையை ஒப்பிடுகையில், இந்த வாரம் மிகவும் அடிமட்ட விலையாக 66 ரூபாய் தான் கொடுத்துள்ளனர். சென்ற வாரம் ரூ.68 - 69 வரை கொடுத்தனர். மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை கூடத்தில் சென்ற வாரம் ரூ.71 வரை விற்கப்பட்டுள்ளது.

ஆனால் எங்களுக்கு குறைந்தபட்ச விலையை கொடுத்தால் கூட போதும், ஏனென்றால் இந்த மழை வெள்ளத்தில் பயிரிட்டு அந்த பருத்தியை காப்பாற்றி கொண்டுவருவதே பெரும்பாடாக இருக்கிறது. ஆகையால் மத்திய அரசும் மாநில அரசும் தகுந்த விலையை கொடுக்க வேண்டும்.

விவசாயத்தில் உரத்தில் இருந்து வேலை கூலி ஆட்கள் முதற்கொண்டு அனைத்துக்குமே விலை அதிகமாகி விட்டது. அதனை வியாபாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை அடிமைத்தனமாக நடத்துவது போல தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.

கடிச்சம்பாடியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் வெங்கட்ராமன் கூறுகையில், "இந்த வார விலை ஒரு குவிண்டாலுக்கு போட்டுள்ளனர். விலையில் பெரிதாக ஒன்றும் ஏற்றம் இல்லை, மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு பருத்தியின் விலையை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 1 குவிண்டாலுக்கு 12,000 வரை அதிகபட்சமாக விற்பனையானது.

இது விவசாயிகள் மத்தியில் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவர்கள் கொடுக்கும் 6500 ரூபாய் உற்பத்தி செலவிற்கே கட்டுபடியாகாது. குறைந்தபட்சம் 10000 மாவது ஒரு குவிண்டாலுக்கு கொடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனை; ஒரு கிலோ ரூ.147

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.