தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், பொங்கல் விழா சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ் அறிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவப் படுத்தப்பட்டனர்.
இதற்குப் பின்பு செய்தியாளரிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், "காவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை மனதார வரவேற்கிறோம். அதைச் சட்டப்படி நடைமுறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் சட்டமாக்கி, அரசிதழில் வெளியிட வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாநில அரசின் அனுமதியோ, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவோ தேவையில்லை என மத்திய அரசு சொல்வது தவறு. ஒரு மாநிலத்திலுள்ள ஒரு பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அந்த அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது. மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. அப்படி அதைச் செய்தால் அது சட்ட விரோதமானது.
தாமிர இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்திருப்பது என்பது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்வது போன்று தெரிகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மூலப்பொருள் ஆஸ்திரேலியாவில் இருந்துதான் வந்தது. ஆனால், ஆஸ்திரேலியா மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்காவிலும் சுற்றுச்சூழல் பாதிப்புக் கருதி, தாமிர உற்பத்தி ஆலை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இதையும் படிங்க: கண்முன்னே கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள்! - பழநெடுமாறன்